‘சங்கமருவிய காலம் ஒரு இருண்ட காலம்'
தமிழிலக்கிய வரலாற்றில் கி.பி 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 6ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி சங்கமருவிய காலம் என அழைக்கப்படும். சங்கமருவிய காலத்தை இருண்டகாலம் என்றும் அழைப்பர். எனவே, இக்கூற்றுப் பொருந்துமோ என நோக்கலாம்.
சங்கமருவிய காலம் இருண்டகாலம் என அழைக்கப்படுவதற்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். 1. களப்பிரர் ஆட்சி 2. பரத்தமைப் பெருக்கம், தொடர்ச்சியான இன்பநுகர்ச்சி என்பவற்றால் அகவாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி. 3. கள்ளுண்ணல், புலாலுண்ணல், களவு, பொய் என்பவற்றால் ஏற்பட்ட சமுதாயச் சீர்கேடுகள். 4. களப்பிரரின் புதிய அரசியல்முறை தமிழ் மக்களை பாதிப்படையச் செய்தமை. மேற்கூறப்பட்ட விடயங்களே சங்கமருவிய காலத்தின் முற்பகுதியில் சமுதாயம் ஒளியிழந்து போவதற்கு காரணங்களாக அமைந்ததெனலாம். ஆனால் அரசியலை அடிப்படையாகக் கொண்டு சங்கமருவிய காலத்தை இருண்ட காலம் என்று கூறலாமே தவிர இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் இருண்ட காலம் என்று கூறமுடியாது.
மேலும் வாசிக்க - தமிழ் இலக்கிய வரலாறு
அந்தவகையில், திருக்குறள் முதலான பதினொரு அறநூல்கள் சமுதாயத்தை சீர்ப்படுத்தும் நோக்கிலே எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதாவது சங்ககாலப் பகுதியில் அகப்புற ஒழுக்கங்களால் ஏற்பட்ட துன்பங்களை போக்கும் வகையில் இவ்வற இலக்கியங்கள் செயற்பட்டமையால் மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வந்த காலமாகவே குறிப்பிடலாம்.
தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை தோன்றியிருக்கிறது என்பதாலும் அக்காப்பியங்கள் தோன்றுவதற்குரிய சமூகச்சூழல் இருந்திருக்கிறது என்பதாலும் இருண்டகாலம் என்று கூறமுடியாது.
மேலும், தமிழின் பக்தி இலக்கியங்களின் தோற்றத்திற்கு வித்திட்ட காலமாக மட்டுமல்லாது தமிழில் கிடைத்த முதலாவது இலக்கண நூலாகிய தொல்காப்பியம் எழுந்தமையாலும் இக்காலத்தை இருண்ட காலம் என்று கூறமுடியாது. எனவே, அரசியலை அடிப்படையாகக் கொண்டு இருண்டகாலம் என்று கூறலாமே ஒழிய இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இருண்டகாலம் என்று கூறமுடியாது.
தமிழிலக்கிய வரலாற்றில் பக்தி இலக்கியங்களின் தோற்றுவாய்க்கு சங்கமருவிய காலம் அடிப்படையாக அமைந்த காரணங்கள்
ஒரு காலத்தின் இலக்கியப் பண்புகள் தொடர்ந்துவரும் காலப்பகுதியிலும் செல்வாக்குச் செலுத்துவதைக் காணலாம். எனவே, சங்கமருவியகால இலக்கியப் பண்புகள் பல்லவர்கால பக்தியிலக்கியங்களுக்கு எவ்வாறு அடிப்படையாக அமைந்திருந்தன என்பது தொடர்பாக நோக்கலாம்.
சங்கமருவிய காலப்பகுதியில் காரைக்கால் அம்மையாராலும் முதல் மூன்று ஆழ்வார்களாலும் தொடங்கப்பெற்ற பக்தியிலக்கிய மரபே பல்லவர்காலப் பகுதியில் நாயன்மார்களாலும் ஏனைய ஆழ்வார்களாலும் பக்தி இயக்கம் தொடங்க ஏதுவாயிற்று. சங்கமருவிய காலப்பகுதியில் காரைக்கால் அம்மையாரால் பாடப்பெற்ற பதிகவடிவமே பல்லவர் காலப்பகுதியில் பதிக வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதோடு பதினொராவது பாடலில் பதிகத்தின் பயனைக் கூறுகின்ற முத்திரைக்கவியின் தோற்றத்திற்கும் வித்திட்டமை குறிப்பிடத்தக்கது. |
காரைக்கால் அம்மையாரால் பாடப்பெற்ற அந்தாதி, மாலை போன்ற இலக்கிய வடிவங்களே பல்லவர் காலப்பகுதியில் பொன்வண்ணத்தைந்தாதி, பெரியதிருவந்தாதி, நான்முகன்திருவந்தாதி, திருமாலை போன்ற பக்தியிலக்கியங்கள் தோன்ற வித்திட்டது.
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
இறைவனது தோற்றப்பொலிவை வர்ணித்துப்பாடும் பண்பை காரைக்கால் அம்மையாரும் முதலாழ்வார்களும் தொடக்கிவைத்தனர். அந்தவகையில் காரைக்கால் அம்மையார் 'சாலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேளையே போன்றிலங்கும் வெண்ணீறு' இறைதோற்றப் பொலிவைப் பாடியுள்ளார். மேற்படி பண்பை நாயன்மார்களும் ஆழ்வார்களும் பல்லவர் காலப்பகுதியில் பெரிதும் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். உதாரணமாக 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும் .....' என அப்பராலும், ‘பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்...'என தொண்டரடிப்பொடியாழ்வாராலும் இறைதோற்றப்பொலிவு வர்ணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சங்கமருவிய காலத்தில் இறைவனது அருட்செயல்களை பாடிய மரபு பல்லவர் காலத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. காரைக்கால் அம்மையாரும் முதலாழ்வார்களும் வடமொழியிலமைந்த புராண இதிகாசக் கருத்துக்களை பெரிதும் பயன்படுத்தினர். மன்மததகனம், அடிமுடி தேடியமை போன்ற கதைகளைக் எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். இவற்றை பல்லவர்காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பின்பற்றியுள்ளனர். குறிப்பாக சம்பந்தரின் ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாவது பாடல் இராவணன் பற்றியும் ஒன்பதாவது பாடல் அடிமுடி தேடியமை பற்றியும் கூறுவதைக் காணலாம்.
சங்கமருவிய காலத்தில் பக்தியை வெளிப்படுத்த காரைக்கால் அம்மையாரும் முதலாழ்வார்களும் விருத்தப்பா, கட்டளைக் கலித்துறை முதலிய யாப்புக்களைப் பெரிதும் பயன்படுத்தினர். இவையே பல்லவர்கால பதிகங்களிலும் பக்தியை இசையோடு வெளிப்படுத்த அதிகம் கையாளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக பல்லவர்கால பக்தியிலக்கியங்களின் தோற்றுவாய்க்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் சங்கமருவியகாலம் அடிப்படையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் வாசிக்க
கூட்டத்தை குறிக்கும் இளமை பெயர்கள்
கல்வியியல் கட்டுரைகள் - Click Here
கல்வி உளவியல் - Click Here
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்