முன்னுரை
ஒப்பிலக்கிய அறிவு இலக்கிய ஆராய்ச்சிக்கு இன்றியமையாததாகும். ஒப்பிலக்கிய ஆய்வுவழி பெற்றுக்கொள்ளப்படும் முடிவுகள், படைப்பாளிகளின் இலக்கிய ஸ்தானத்தை அறிவதற்கு முக்கிய மானவை. ஒரு படைப்பாளியை, பிற படைப்பாளிகளுடன் ஒப்பிடுகின்ற பொழுதுதான் குறித்த அப்படைப்பாளியின் தனித் தன்மைகள் உண்மையில் துலாம்பரமாகத் தெரியவருகின்றன. காணப்படும் ஒற்றுமைகளுக்கு மத்தியிலும் இருக்கின்ற வேறுபாடுகள், அவனது உண்மை ஆளுமையைத் தரிசிப்பதற்கு வழி செய்கின்றன.
இவ்வாறு, இலக்கியத் திறனாய்வுக்கு மிகுந்த பயன் நல்கும் அறிவுபூர்வமான ஒப்பிலக்கிய ஆய்வானது தமிழில் ஆரம்பமாவதற்கு, கம்பராமாயணமே முதற்றளமாக விளங்கியது எனலாம். கம்ப இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு, கம்பனை, உலகப் பெருங்கவிஞர்களோடு ஒப்பிட்ட முயற்சியோடுதான், தமிழில் ஒப்பிலக்கிய ஆய்வு முதன்முதலில் தொடங்கியது. “கம்பர் கற்பனாசக்தியிலும் வருணனை அலங்காரங்களிலும் மில்டனுக்குக் குறைந்தவரல்லர். ஐரோப்பியர்களுடைய ஆதிகவியான ஹோமருக்கு எவ்விதத்திலும் இளையவரல்லர். ப்ரபஞ்ச விலாஸப் புலமையில் ஒருவாறு ஷேக்ஸ்பியரோடொத்தவர்" (மணி, 2007: 84) எனும் தி.செல்வக்கேசவராய முதலியாரின் கூற்றுத்தான் ஒப்பிலக்கிய நோக்கிலான முதலாவது கருத்துரைப்பாகும். இதனைச் சிறப்பாக வளர்த்தெடுத்து, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பயன் செய்தவர், 'கம்பராமாயண இரசனை' தந்த பேரறிஞர் வ.வே.சு. ஐயராவார். கம்பனைப் பிற காவியப் புலவர்களுடைய படைப்புகளோடு ஒப்பிட்ட அவர் முயற்சிகளுடனேயே, தமிழில் முறையான - ஆராய்ச்சி பூர்வமான - ஒப்பியல் திறனாய்வு தோற்றங் கொண்டது. எனவேதான் அவரை, தமிழ் ஒப்பியல் துறையின் முன்னோடியாகக் கருதுகிறது | ஆய்வுலகு.
தமிழ்க் கவிதையின் உச்சமாக அமைந்துள்ள கம்ப காவியம், எவ்வாறு உலகப் பேரிலக்கிய வரிசையில் சிறப்பிடம் பெறுகின்றது என்பதனை, இவ் ஒப்பியல் அறிஞரின் கம்பராமாயணத் திறனாய்வு கள், ஆய்வு பூர்வமாக முன்வைக்கின்றன. கம்பனின் வன்மை, மென்மைகளைக் காட்டும் அவர்தம் ஆய்வு நூல் மற்றும் கட்டுரைகள், தமிழ்க் கவிதை குறித்து நோக்கும் ஆய்வாளர்களுக்கும், தமிழிலக்கிய வரலாற்று மாணவர்களுக்கும் மிகவும் இன்றியமை யாதவையாகும். இத்திறனாய்வுகளில் கம்பராமாயணம் குறித்த ஐயரின் கருத்துகள் ஆங்காங்கே வெவ்வேறிடங்களில் விரவியுள்ளன. அவற்றை ஒரே பார்வையில் தொகுத்து, கம்பனின் தனித்துவங்களாக ஐயர் காட்டும் விடயங்களை அறிவது மிகுந்த பயன் செய்வதாகும். இவ்வாறு, தமிழ் ஆய்வியலில் முக்கியத்துவம் பெறும் ஐயரின் கம்பன் குறித்த திறனாய்வுக் கட்டுரைகளை, இந்த ஆய்வு நோக்கவிழைகின்றது.
மேலும் கட்டுரைகள் வாசிக்க - Click Here
வ.வே.சு. ஐயரின் கம்பராமாயணத் திறனாய்வுகள்
தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் பெருமுக்கியத்துவம் பெறும் வ. வே.சு. ஐயர் கம்பராமாயணத்தை ஆழ்ந்து கற்றவர். அதன் சிறப்புகளை உள்ளபடி அறிந்தவர். இதனால் இக்காப்பிய ஆசிரியரான கம்பனிடம் நல்ல ஈடுபாடு கொண்டவர். தரமான நூல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டு, சீநிவாசகாரியருடன் இணைந்து தாம் தொடங்கிய பதிப்பகத்திற்கு ‘கம்ப நிலையம்' என்றே அவர் பெயரிட்டார். இதிலிருந்து கம்பன் மீது அவருக்கிருந்த மதிப்புப் புலனாகும்.
பல வழிகளில் கம்ப இலக்கியத்தோடு உறவு கொண்டிருந்த அவர், லண்டனில் வாழ்ந்தபொழுது, 1908ஆம் ஆண்டு கெகேட் யுனிற்றேறியன் சேர்ச்சில் கம்பராமாயணம் பற்றி, ஆங்கிலத்தில் உரையாற்றினார். 1917இல், தமது கம்பன் நிலையம் சார்பாக கம்பராமாயணத்தின் பாலகாண்ட சுருக்கப் பதிப்பை வெளிக் கொணர்ந்தார். பின், பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தபொழுது (1921இல்) 'Kambaramayana - A Study' எனும் ஆங்கில நூலின் பெரும் பகுதியை எழுதி நிறைவு செய்தார். நிறைவாக, 1924 ஒக்டோபர் முதல் தான் மறையும் வரை தனது பாலபாரதி இதழில் புகழ்பெற்ற ‘கம்பராமாயண இரசனை' எனும் கட்டுரைத் தொடரை எழுதிவந்தார். இவ்வாறு, கம்ப இலக்கியத்தோடு பல நிலைகளிலும் உறவு கொண்டிருந்த ஐயரின் கம்பராமாயண ஆராய்ச்சிக் கட்டுரைகள், கம்ப இலக்கியத்தின் முக்கியத்துவத்தை - அதுவரை அறியப் படாதிருந்த தனித்துவ விடயங்களை - இலக்கிய உலகிற்கு எடுத்துக்காட்டுவனவாக இருந்தன.
இக்கட்டுரைகளை நோக்குவதானது, பின்வரும் இரண்டு வழிகளில் அவசியமானதாகும்:
அ) மேலே நோக்கப்பெற்றது போல, தமிழில் முறையாக ஒப்பிலக்கிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாத ஒரு கால கட்டத்தில், முதன்முதலில் ஆராய்ச்சி பூர்வமாக எழுதப்பட்ட ஒப்பியலாய்வுக் கட்டுரைகள், இவைதாம் என்பதனால் வருகின்ற முக்கியத்துவம்.
ஆ) உலகப் பேரிலக்கிய வரிசையில் வைக்கத்தக்க தமிழ் நூலைக் கண்டு காட்டிய கட்டுரைகள் அவை என்பதால் வரும் முக்கியத்துவம்.
உலகின் உன்னத இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில், தமிழர்களுக்கு ஆங்கில மொழி மூலமாகக் கிடைத்த "அத்தகைய உயர் இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பேசத்தக்க நூல், தமிழில்" எது என்பதான எண்ணம், ஆதங்கம் தமிழறிஞர்களிடத்தே எழுந்தது. இவ் ஏக்கத்தை இல்லாது செய்து, உலகப் பெருங்காப்பிய வரிசையில் வைக்கத்தக்க உன்னத இலக்கியங்களுள் முதன்மையானது கம்பராமாயணம் என்று எடுத்துக்காட்டியவை கம்ப இலக்கியம் குறித்த ஐயரின் ஒப்பாய்வுக் கட்டுரைகளே.
1918இல் 'கவிதை' எனும் கட்டுரை மூலம் ஒப்பிலக்கியப் புலத்துள் இறங்கிய வ.வே.சு. ஐயர், உலகப் பேரிலக்கியங்களுடன் கம்பராமாயணத்தை ஒப்பிட விழைந்தார். இதற்கென, ஆதி காவிய மாகிய வான்மீகி ராமாயணத்தையும், கம்பராமாயணத்தையும், உலக இலக்கியங்கள் பலவற்றையும் துறைபோகக் கற்று பல்லாண்டுகால நூற்பயிற்சியின் பின்னர் அப்பணியில் ஈடுபட்டார். மிகச் சிறந்த வாசகராக விளங்கிய அவர் ஒருபோதும் "நுனிப் புல் மேய்ந்து..” மேலோட்டமாகத் தமது கருத்துக்களைத் தெரிவித்தவர் அல்லர். "தேச பக்தர்களுள் ஐயரைப் போல நூல் பழக்கம் உள்ளவர்கள் யாருமே இல்லையெனச் சொல்லலாம். அபாரமாகப் படிப்பார். வீரர்களின் சரித்திரம், இலக்கியம், யுத்த சாஸ்திரப் புஸ்தகங்கள், பிறநாட்டு நல்லறிஞர்களின் நூல்கள் இவைகளை அய்யர் இடைவிடாது படித்துக் கொண்டிருப்பார்” (மணி, 2009: 39,40). என அவரது நூற் பழக்கம் பற்றி வ.ரா. கூறும் கருத்துகளை நோக்கினால், ஒரு தேசபக்தர் - சுதந்திரப் போராட்ட வீரர் - எந்தளவு தூரம், இலக்கியத் தாகம் உடையவராக விளங்கியுள்ளார் என்ற வியப்பே தலைதூக்கும். கிட்டத்தட்ட பத்தாண்டு காலமாக, கம்பராமாயணத்தையும் பிறவற்றையும் கற்று அவதானித்த விடயங்களையே அவர் ஒப்பாய்வாக வெளிப்படுத்தியுள்ளார். இதை, “தினம் வான்மீகி
கல்வியியல் கட்டுரைகள் - click here
ராமாணயத்தில் ஆறு சருக்கங்களும், கம்பனில் நூறு செய்யுள்களுமாக நான்கு மாதகாலம் இரண்டு காவியங்களையும் தொடர்ந்து படித்தும், இந்த நான்கு மாதங்களுக்கு முன்னும் பின்னும் அங்கங்கே அப்போதைக்கப்போது தனித்தனிப் பாகங்களைப் படித்தும், சுமார் பத்து வருஷங்களாக சோதித்து, வான்மீகியையும், கம்பனையும் நாம் சீர்தூக்கிப் பார்த்து வந்திருப்பதில்...” (மணி, 2007: 34) எனும் அவர் கூற்றுக்களே தெரிவிக்கின்றன. இவ்வாறு, ஐயர் கூறுவதிலிருந்து, அவர் எத்துணைதூரம் ஒப்பீட்டு ஆய்வு நோக்கில் ஆதிகாவியத்தையும் கம்ப காவியத்தையும் பிற இலக்கியங்களையும், தமது தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், ஆங்கில மொழி அறிவுத் துணையுடன் கற்றுள்ளார் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.
பல பிரசித்தமான காவியங்களையும் நூல்களையும் கற்ற ஐயரின் மனதில் சில இலக்கியங்கள் மிக உன்னதமான இடத்தைப் பெற்றிருந்தன. அந்நூல்களை, "ராமாயணமும் (வால்மீகியினதும், கம்பனதும்) பாரதமும், பாகவதமும், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இலியாதும் (Iliad) ஓதூஸியமும் (Odyssey) ஏனையமும் (Aeneid) ஷாஹநாமாவும், லூஸியாதும் (The Lusiads) எருசலேம் மீட்ட காதையும் (Jerusalem Liberated) ஸ்வர்க்க நஷ்ட காவியமும் (Paradise Lost) தெவிட்டாத இன்னமுதாய் விளங்குகின்றன" (மணி, 2009: 265, 266). என, தமது 'காவிய உத்தியானம்' எனும் கட்டுரையில் வரிசைப் படுத்துகிறார் ஐயர்.
இவ்வாறு, உலகில் தோன்றிய கவிச்சிறப்பு மிக்க நூல்களாக, தான் கருதும் இலக்கியங்களுள் ஒன்றாக விளங்கும் கம்பனது காவியம், எவ்விதங்களில் கவிதைப் பேரிலக்கியங்கள் பிறவற்றை விட, மேம்பட்டுச் சிறக்கிறது என்பது குறித்து, தமது ஒப்பியலாய்வுக் கட்டுரைகளில் ஐயர் பல கருத்துக்களைக் கூறியுள்ளார். இக் கருத்துக்கள், உலகப் பெருங்கவிஞர்கள் வரிசையில் கம்பனும் இடம் பிடித்துள்ளமைக்கான காரணங்களைத் தருகின்றமையோடு, பிற கவிஞர்களிடம் காணப்பெறாமல் கம்பனிடம் காணப்பெறும் தனித்தன்மைகளையும் - அவன் சாதனைகளையும் - எடுத்துரைக் கின்றன. எனவே, தமிழ்க் கவிதை வரலாறு குறித்தும், தமிழ்க் காப்பியங் குறித்தும் ஆராயும் அனைவரும் இக் கருத்துக்களை அறிவது அவசியமானதாகும்.
1. காப்பிய ரசனைச் சுவை “ரஸிகனுடைய மனதிற்குத் திருப்தி உண்டாகும்படி எந்தக் கவியின் அமைப்பு அமைந்திருக்கிறதோ அவனைத்தான் ரசனையில் சிறந்தவன் என்று சொல்லலாகும் உண்மையாகப் பார்க்கையில் பெருங்காப்பியங் களுக்கு ரசனையே இன்றியமையாதது. ரசனா சுகம் இல்லாமல் வேறு எந்த சுகம் இருப்பினும் பெருங் காவியங்கள் பெருமையுள்ளன வாகா” (மேலது: 106) எனக்கூறும் ஐயர் கம்பராமாயணத்தில் உள்ள ரசனைச் சுவையை மிக உயர்ந்தது எனப் பாராட்டுகிறார். கம்பன் தரும் இச்சுவை, ரசிகர்களுடைய அறிவுக்கு அமுதமாக இருப்பதாகக் கூறும் ஐயர், கம்பனின் கவித்துவ மேன்மைக்கு இதனை முக்கிய காரணமாகக் கருதுகிறார்.
எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here
2. காம்பீரியம் அடுத்து கம்ப காவியத்தின் உயர்ச்சிக்கு காரணமாக ஐயர் குறிப்பிடுவது, அக்காப்பியத்தில் வெளிப்பட்டுத் தெரியும் காம்பீரி யத்தையே. “இனி, கம்பனுடைய கவிதையை ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டுமானால் அதன் சிறந்த குணம் காம்பீரியம் என்று சொல்லுவோம்” (குப்புசாமி, 2003: 51) என்பது ஐயர் கூற்று. சிருங்காரத்தை அழகாகவும், சோகத்தை வாசகர் கண்ணீர் பெருக்கும் படியும் கூறியுள்ள கவி கம்பன், “வீரத்தையும் வியப்பையும் ரௌத்திரத்தையும் தன் சொந்தமாக்கிக் கொண்டுவிட்டான்” (மேலது: 51) என்கிறார் அவர்.
முதலில் கூறப்பெற்ற ரசனைத் திறனும் செய்யுளின் காம்பீரியமும் உலக மகா கவிகள் பலரிலிருந்தும் கம்பனை வேறுபடுத்தி, அவனைத் தனித்துவமான கவிச்சக்கரவர்த்தியாக நிலைநிறுத்துகின்றன என்பது ஐயர் முடிவு. இதனை , “ரஸவாதிகளுக்கும் அகப்படாத ஆயிரத்தெட்டு மாற்றுத் தங்கத்துக் கிணையான கம்பீரமான செய்யுட்களும், அவற்றைப் பொருந்த அமைத்து வைக்கும் ரசனைத் திறனுமே கம்பனைப் பிராகிருதமான கவிகளினின்றும், அவன் சாதியைச் சேர்ந்த கலைவல்லாளரான வால்மீகி, வியாசர், ஹோமர், மில்தன் முதலியோரினின்றும் வேறுபடுத்தித் தனிச்சிறப்புத் தருகின்றன” (மணி, 2009: 106). எனத் தெரிவிக்கிறார் அவர். 3. மனித உணர்ச்சிச் சித்திரிப்பு அடுத்து கம்பனின் தனித்தன்மையாக, மனித உணர்ச்சிகளைப் படம் பிடித்தக் காட்டும் கம்பனின் இயல்பைக் காட்டுகிறார் ஐயர். “மனித இதயத்தின் உணர்ச்சிகளையும் பாவங்களையும், இயக்கங் களையும் வர்ணிக்கையில் கம்பன் வால்மீகியைத் தனக்குப் பின்னே வெகு தூரத்தில் நிறுத்தி விடுகிறான்” (குப்புசாமி, 2003: .51) என்கிற + ஐயர், இதற்கு உதாரணமாக, பூக்கொய் படலம், உண்டாட்டுப் படலம், உலாவியற் படலம், பரசுராமப் படலம் ஆகியவற்றிலுள்ள செய்யுட்கள் அனைத்தையுமே சுட்டலாம் என்கிறார்.
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
4. கதாபாத்திரங்களின் ஆத்மதைப் பண்பு அடுத்து கம்ப காவியத்தின் கதாபாத்திரங்களைப் படைக்கும் பொழுது, அப்பாத்திரங்களின் ஆத்மதைப் பண்பு வெளிப்படுமாறு கம்பன் படைத்துள்ள ஆற்றலைக் காட்டுகிறார் ஐயர். "ராமனாகட்டும் சீதையாகட்டும் வாலியாகட்டும் ராவணனாகட்டும் இந்திரசித்தாகட்டும் எல்லா நாயகர்களும் வான்மீகியிலிருப்பதைவிடப் பன்மடங்கு கொண்ட ஆகிருதியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இங்கே நாம் சரீர ஆகிருதியைப் பற்றிப் பேசவில்லை ஆத்மதையைப் பற்றித்தான் பேசுகிறோம்” (மேலது; 52) என்கிறார். பாத்திரப் படைப்பின் போது வெளிப்படும் ஆத்மார்த்தப் பண்பை, கம்பனுடைய உன்னத ஆளுமையின் அடுத்த குணமாகக் கொள்ளலாம் என்பது ஐயர் முடிவு.
5. பேருணர்ச்சி - அகண்ட உணர்ச்சி வாசகர்கள் கவிதையை வாசித்து அனுபவிக்கும்பொழுது அவர்களின் உள்ளத்தில் பேருணர்ச்சி தோன்ற வேண்டும். அவ்வாறு, அகண்ட உணர்ச்சியை எழுப்பவல்ல கவிதைகளே, உன்னதமான கவிதை களென்பது ஐயர் கருத்து. இவ்வாறு, பேருணர்ச்சி எழுப்பவல்ல கவிதைகளைப் படைத்துத் தந்தமையைக் கம்பனின் அடுத்த சிறப்பாகக் காண்கிறார் அவர். வனத்திற்குச் செல்லுமாறு கைகேயி இராமரிடம் கூறியதும், இராமனைப் பற்றிக் கம்பன் பாடும் “இப்பொழுது எம்மனோரால்” என்னும் பாடலை எடுத்துக்காட்டும் ஐயர், வாசகர் மனதில் அகண்ட உணர்ச்சி கிளப்பவல்ல கம்பனின் கவிதா ஆற்றலுக்கு இதை ஓர் உதாரணமாக நிறுத்துகிறார் (மணி, 2007: 68). 6. பாத்திரப் படைப்பில் பண்பாடு கம்பன் பாத்திரங்களை தமிழ்ப் பண்பாடு நோக்கி, வார்த்தெடுத்துள்ள பண்பையும் கம்பனின் தனித்தன்மையாகச் சுட்டுவர் ஐயர். அதாவது, வான்மீகியின் பாத்திரங்கள் சிலவேளை குறைபாடுகள் சிலவற்றோடு காணப்படுவதைச் காட்டும் ஐயர், கம்பனின் படைப்பில் அக் குறைபாடுகள் அற்று, நாயகப் பாத்திரங்கள் உயர்ந்து விளங்குகின்றன என எடுத்துக் கூறுகிறார்.
இதற்கு உதாரணமாக அவர் சீதையின் பாத்திர வார்ப்பைத் தமது கட்டுரையில் கூறிச் செல்லுகின்றார். மாரீசன் பொய்க்குரலிட்டுச் சத்தம் செய்தவுடன் இராமனுக்கு உதவிக்கு செல்லாத இலக்குவனைப் பார்த்து, சீதை சொல்லும் வார்த்தைகளை, வான்மீகியிடமிருந்தும் கம்பனிடமிருந்தும் எடுத்துக்காட்டும் ஐயர், கம்பன் எவ்வாறு வார்த்தை களை அளவாக நிறுத்துப் போடுகிறான் என்பதைச் சுட்டுகிறார்.
வான்மீகியின் சீதை “என்னைச் சுவீகரிக்க வேண்டும் என்றே தான் நீ இராமனிடம் செல்லாமல் இங்கே நிற்கிறாய்” என்றும், “நீ தனியாக ராமனைப் பின்தொடர்ந்து காட்டுக்கு வந்திருப்பதைப் பார்த்தால் என்னைக் காமித்தோ, அல்லது பரதனுடைய ஏவுதலினா லோதான் வந்திருக்கிறாய் என நினைக்கிறேன்" என்றும் இலக்குவனிடம் கூறுகின்றாள் (குப்புசாமி, 2003: 53,54). ஆனால் கம்பனுடைய சீதை இவ்வாறு அபசுரமான வார்த்தைகளைச் சொல்வது இல்லை எனக்கூறும் வ.வே.சு.ஐயர்,
"குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன் மற்றை வாள் அரக்கன் புரி மாயையால் இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் நிற்றியோ இளையோய் ஒரு நீ" எனவும், “நின்ற நின்நிலை இது நெறியிற்று அன்று” எனவும், கம்பன் காட்டும் சீதை, நாகரிகமாக உரையாடும் பான்மையை எடுத்துக்காட்டுகின்றார் (மேலது: 53,54).
உயர் பாத்திரங்கள் தமிழ்ப் பண்பாட்டைக் கைவிடாது நடைபயிலுமாறு கம்பன் காவியத்தை அமைத்திருப்பது, அவனுடைய தனித்தன்மையைக் காட்டுகின்றது. இதனால்தான், வடமொழிக் காவியத்தின் மொழிபெயர்ப்பாகக் கம்பகாவியத்தை உணரமுடிய வில்லை. அது ஒரு தனிப்படைப்பாக - தற்புதுமையான தமிழ்க் காவியமாக ஒளிர்கின்றது எனலாம். "ஒரு உத்கிருஷ்டமான கவிக்குப் பிறகு இன்னொரு கவி அதே கதையைப் பாடினானானால், முதல் கவியின் போக்கும் வாக்கும் பின்னவன் காலைச் சுற்றி நிற்கும் ஈயத் தளைபோலாகி விடுகின்றன. ஆனால், கம்பன் பூமண்டலத்தை ஓர் தலையால் தாங்கும் ஆயிரந் தலை ஆதிசேஷன் போல வால்மீகியின் கனத்தை அலஷியமாய்த் தாங்கி நடப்பதோடு, அவனது கதையையும் தனக்குக் குற்றேவல் செய்து தன் உத்பிரேஷைகளை அலங்கரிக்கும் மணிப் பூண்களாகச் செய்துவிடுகிறான்” (மணி,2007: 116). | என ஐயர் கூறுவதற்கு, இதுவே காரணம் எனலாம்.
இவ்வாறு, கம்பனைப் பிற உன்னத கவிஞர்களுடன் ஒப்பிடும் ஐயர், எல்லா இடங்களிலும் கம்பனை உயர்வாகவே கருதுகிறார் எனச் சொல்வதற்கில்லை. நேரிய ஒப்பியலாய்வாளராக நின்று, சில இடங்களில் கம்பனைப் பிறர் வென்றுள்ள தன்மையையும் அவர் குறிப்பிடவே செய்துள்ளார். எடுத்துக்காட்டாக ஆதிகவியை கம்பனுடன் வைத்து ஒப்பிட்டுப் பேசும் இடத்தில், அவர் எழுதியுள்ள பின்வரும் குறிப்புக்கள் தரத்தக்கன. “பிரகிருதியின் தோற்றங்களை வருணிப்பதில் காடுகளில் சஞ்சரிக்கும் இயல்பினரான வான்மீகி கம்பனை முற்றிலும் வென்று விடுகிறார்” (குப்புசாமி, 2003: 49).
“இலங்கையை அனுமன் எரிக்கும் சம்பவத்தில், கடல் தாவு படலத்தில் போல வால்மீகியின் வர்ணனை கம்பனதைவிட மிகவும் அழகாக இருக்கிறது. கம்பனது உத்பிரேஷைகள் அக்காட்சியின் காம்பீரியத்தைத் திரை போட்டது போல மறைத்து விடுகின்றன” (மணி, 2009: 93). இவ்வாறு, சில இடங்களில் உலகப்பெருங் கவிஞர்கள் கம்பனை மேவுகின்ற சந்தர்ப்பங்களையும் ஐயர் சுட்டியே செல்கின்றார். “ராவணனுடைய காம நோயை வர்ணிக்கக் கம்பன் 80 செய்யுள்கள் எழுதியிருக்கிறார். இது அதி வர்ணனையே... இவ்வர்ணனைகளில் பெரும்பாலான பன்னாட்டு இலக்கியங்களையும் ஆராய்ந்து சுவையறிவைச் சேகரித்தவருக்குச் சுவை கொடா” (மேலது: 93).“யுத்த காண்டம் கடல் வர்ணனையோடு தொடங்குகிறது. கடல் வர்ணனை மூன்றாந் தரத்ததாகத் தானிருக்கிறது. பைரனுடைய கம்பீரமான சமுத்திர வர்ணனையை நினைவுறுத்தக்கூடிய ரஸிகர் காதில் அடிக்கொரு முறை அவர்கள் விரும்பாமலிருக் கையிலும் கூடக் கொண்டிருக்கக்கூடிய செய்யுள் ஒன்றேனும் இப்படலங்களில் இல்லை. கடல் காண் படத்திலுள்ள பன்னிரண்டு செய்யுட்களும் கேவலம் வார்த்தைகளால், வியர்த்த வார்த்தை களால், நிரம்பியிருக்கின்றன” (மேலது: 93). போன்ற சில இடங்களை இத்தன்மைக்கு எடுத்துக்காட்டுகளாகச் சுட்டமுடியும்.
இவ்வாறு, நேர் நின்று கம்ப இலக்கியத்தை, முக்கியமான இந்தியப் பெருங் காவியங்கள் மற்றும் உலகப் பெருங் காவியங் களோடு ஒப்பிட்ட ஐயர், முடிவுகளாகத் தெரிவிக்கும் கருத்துகள் முக்கியமானவை. அவற்றுள் பின்வரும் மேற்கோள்கள் இரண்டும் மிக முக்கியமானவை.
“கம்பனுடைய இராமாயணமானது மற்றக்கவிகள் எழுதிய இராம சரிதைகளையும் தமிழில் எழுதப்பட்ட இதர காவியங்களிற் பெரும்பாலானவற்றையும்கூட ‘வெயிலிடைத் தந்த விளக்கொளி போல் ஆக்கி விட்டது. இது மாத்திரமல்ல, கம்பராமாயணமானது ஹோமர் எழுதிய இலியாதையும், விர்க்கிலியன் எழுதிய ஏனையிதையும், மில்டனுடைய சுவர்க்க நஷ்டம் என்ற காவியத்தையும், வியாஸ பாரதத்தையும், தனக்கே முதனூலாக இருந்த வால்மீகி ராமாயணத்தையும் கூட, பெருங்காப்பிய லட்சணத்தில் அம்சங்களுள் அனேகமாய் எல்லாவற்றிலும் வென்றுவிட்டது என்று சொல்வோம்” (வ.வே.சு. ஐயர். 2000: 06). "கவிதா லோகத்தின் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்களெல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடிசாய்த்து வணங்க வேண்டியதுதான். மேல்நாட்டாருக்குள் கவி சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில் தாந்தே, ஷேக்ஸ்பியர், மில்டன் மோலியேர், கதே ஆகிய இவர்கள் கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழே தானிருக்கிறார்களே ஒழிய அவனை மீறவில்லை ” (குப்புசாமி, 2003: 19). பன்மொழி அறிவும் பன்னூற் பயிற்சியும் நேர்மையுமுள்ள ஓர் ஆய்வறிஞரின் இவ் ஒப்பியலாய்வு முடிவுகள், கம்பனது கவித்துவப் பெறுமதியை உள்ளபடி எடுத்துக்காட்டி, தமிழ் இலக்கியப் பரப்பையும் இந்திய இலக்கியப் பரப்பையும் தாண்டி, உலக இலக்கியப் பரப்பில் அக் கவிஞன் பெறும் முதன்மையை உறுதி செய்வனவாக உள்ளன.
முடிவுரை
கவிதை எனும் கட்டுரை மூலம் ஒப்பாய்வுப் புலத்துள் இறங்கிய வ.வே.சு. ஐயரின் கம்ப இலக்கியங் குறித்த திறனாய்வு நோக்கு, பாலகாண்டத்துக்கான அவரது உரைப் பதிப்பின் முன்னுரையிலும், 'Kambaramayana- A Study' எனும் ஆங்கில நூலிலும், 'கம்பராமாயண இரசனை' எனும் கட்டுரைத் தொடரிலும் நன்கு வெளிப்பட்டுள்ளது.
அவரது இவ்வாய்வுக் களங்களைத் தொகுத்து நோக்கும்போது, அவரின் ஆய்வுத் தன்மை நுண்மையுற்றும் கூர்மையடைந்தும் சென்றிருக்கக் காணலாம். 1917இல் வெளிவந்த பாலகாண்ட உரைப் பதிப்பின் முன்னுரையில் கம்பனின் காலம், பிறப்பு முதலிய விடயங்கள் குறித்துக் கருத்துரைக்கும் ஐயர், 1921இல் வெளியிட்ட ஆங்கில நூலில் கம்பனின் பாத்திரப் படைப்பாக்கம் குறித்து நுண்மையாக நோக்குகின்றார். பின், அவர் வெளியிட்ட ‘கம்பராமாயண இரசனை' க்கட்டுரைகளில் அவர் ஆய்வுளம் மேலும் நுண்மையுற்று காப்பியக் கட்டமைப்புத் தொடர்பான ஒப்பாய்வில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு கவிஞனின் பிறப்பு முதலியன குறித்த ஐதீகங்கள், பாத்திரச் சித்திரிப்பு, காப்பியக் கட்டமைப்பு என, தருக்க ரீதியான வளர்ச்சியாக உள்ளது ஐயரின் ஆய்வுப் புலம்.
பன்மொழி பன்நூல் அறிஞரான ஐயரின் கருத்துகள்தாம், தமிழ்த் திறனாய்வுலகம் கம்பன் குறித்து மிக விரிந்த அளவில் முதன்முதலாகக் கண்டு கொண்ட - தர்க்கரீதியாக ஏற்புடைமைமிக்க - ஆய்வு முடிவுகளாகும். காமம் செப்பாது கண்டது மொழிந்த ஐயரின் தக்க ஆய்வுகள் கம்பனின் இலக்கிய சாதனையை தமிழ் மற்றும் இந்திய எல்லை கடந்து உலக வட்டத்திற்குள் கொண்டு சென்றன. மேலும் தமிழில் ஒப்பியல் ஆய்வுக்கு பலமான அடித்தளமிட்டு பின்னாளில் அத்துறை நெடிது வளரத் தக்க மூலமாய் அமைந்து சிறந்தன.
உசாத்துணை
குப்புசாமி, எஸ்.என். (ப.ஆ.) 2003. கம்பராமாயணம் சுருக்கம் பாலகாண்டம்
உரைக்குறிப்புகள் - வ.வே.சு. ஐயர். சென்னை : உமா பதிப்பகம். மணி, பெ.சு. 2007. கம்பன் புகழ் பரப்பிய வ.வே.சு. ஐயர். சென்னை : பூங்கொடி
பதிப்பகம். மணி, பெ.க. (தொ.ஆ.) 2009. கம்பன் புகழ் பரப்பிய வ.வே.சு. ஐயர்.
சென்னை: பூங்கொடி பதிப்பகம். வ.வே.சு. ஐயர். 2000. கம்பராமாயண ரஸனை. சென்னை : ஐந்திணைப்
பதிப்பகம்.
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்