இலங்கையில் பால் மற்றும் பால்நிலை பற்றிய நோக்கு


அறிமுகம்
 இலங்கை நாடு பல இன மக்களை கொண்ட நாடாகும். எமது நாட்டில் வாழும் பல இன மக்களுடைய மொழி, கலாசாரம், மதம், எண்ணங்கள், ஆடை அலங்காரங்கள், சம்பிரதாயங்கள், உணவு முறைகள் மற்றும் வீடு வடிவமைப்புகள் போன்றவை வெவ்வேறானவை. அவ்வாறான பன்முக கலாசாரமுள்ள இலங்கை தீவிலே சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் ஆகிய இனத்தவர்கள் வாழ்வதுடன் அவர்களில் பெரும்பாலான சிங்களவர்கள் பௌத்தர்களாகவும் பெரும்பாலான தமிழர்கள் இந்து மதத்தை பின்பற்றுபவர்களாகவும் முஸ்லீம்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னர்  சிங்களவரகளிலும் தமிழர்களிலும் சிலர் கிறிஸ்தவ சமயத்தையும் பின்பற்றத் தொடங்கினர்.

 இவ்வாறு பல இன,மதமக்கள் பிரதேசமாக கூடி வாழ்ந்த போது அவர்களுக்கென தனித்துவமான கலாசாரங்களை பின்பற்றுபவர்களாக காணப்பட்டனர். இங்கு இன மத கலாசாரங்களின் அடிப்படையில் வேறுபாடுகள் காணப்பவது போலவே பிரதேச ரீதியாகவும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதவது தமிழரிடத்தே யாழ்பாணத் தமிழர் மட்டக்களப்பு தமிழர் மலையக  தமிழர் என்பன போன்று கண்டிய சிங்களவர் கரையோர சிங்களவர் என்பன போன்ற பிரதேச ரீதியான வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவ்வாறு பிரதேச ரீதியான வேறுபாடும் போது கலாசாரங்கள் நடை உடை பாவனை பேச்சு வழக்கு சம்பிரதாயங்கள் நம்பிக்கைகள் என்பன மாற்றமடைகின்றன. இவ்வாறான பன்மைத்துவ சமூக அமைப்பினை கொண்ட நாட்டிலே பால் மற்றும் பால்நிலை பற்றிய சிந்தனைகளையும் அதன் அடிப்படையிலான செயற்பாடுகளின் இன்றைய நிலையினையும் நோக்குவோம்


1. பால் மற்றும் பால்நிலை
      மனிதர்கள் தற்காலிக இனபெருக்க தேவைகளின் காரணமாக ஆண் என்றும் பெண் என்றும் உயிரியல் ரீதியான வேறுபாடுகளுடன் படைக்கப்பட்டிருப்பதை நாம் பால் என்னும் பதத்தில் குறிப்பிடுவோம். பால் என்பது  மனிதர்களுக்கு மற்றுமன்றி மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் பொருந்துவதாகும். அனேக உயிரினங்களுக்கு மத்தியிலும் ஆண் உயிரினம் பெண் உயிரினம் என பால் வேறுபாடுகள் உள்ள இனங்கள் உண்டு.

ஆயினும் பால் நிலை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகத்தினால் விதிககப்படும் குண இயல்புகளும் அவை தொடர்பான பாத்திரங்களும் ஆகும்.   பால் சமூகத்தில் வகிக்கின்ற நிலையே பால்நிலையாகும். சமூகமயமாக்கங்களினாலே உருவானதாலே இப்பால் நிலை என்பது மனிதர்களின் மத்தியில் மட்டும் காணப்படுகின்றது. ஆண்கள் வீரமுள்ளவர்கள், தைரியசாலிகள், அறிவுபூர்வமானவர்கள் என்பதால் நாட்டிற்கும் வீட்டிக்கும் அவர்கள் தலைவர்களாக வருவது பொருத்தமாகும் என தற்போது நிலவும் பால் நிலை கோட்பாடு கருதுகிறது. அதே போன்று பெண் அழகானவள், நாணம் கொண்டவள், இலகுவில் அச்சமடைய கூடியவள், உணர்ச்சி வசப்படகூடியவள் என இக்கோட்பாடு எடுத்தியம்புகிறது. இதில் ஆண்களுக்கு கீழே அடங்கி வாழ்பவளாகவே பெண் சமூகம் பால் நிலை வாயிலாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு உடலியல் ரீதியான வேறுபாடுகள் பால் என்றும் அதை சமூகம் வரையறுத்துள்ள விதத்தினை பால் நிலை என்றும் கூறலாம்.

2. சமூக ரீதியான நோக்கு
சமூக அமைப்பில் அடிப்படை அலகான குடும்பத்தில் பால் பற்றிய  நோக்கு...
• வளர்ப்புமுறை
  சமூகத்தில் மிகவும் அடிப்படையான நிறுவனமாக குடும்பம் செயல்படுகின்றது. குடும்பம் என்பது திருமணம் என்ற பந்தத்தோடு ஆரம்பிக்கின்றது. திருமண முறைமை என்பது ஆண், பெண் இருபாலாரையும் இணைக்கும் பாலமாக காணப்படுகிறது. திருமணத்தின் பின் பொதுவாக இருவீட்டாரினதும்  சமூகத்தின் எதிர்பார்ப்பாக குழந்தை பாக்கியம் காணப்படுகிறது. இதிலும் குடும்பம் தலைப்பது ஆண் குழந்தையினால் என்ற எண்ணம் பொதுவாக சமூகத்தில் காணப்படுகிறது. எனவே ஆண் பிள்ளை வரம் வேண்டும் என்று ஊரிலுள்ள அரச மரமெல்லாம் சுற்றுகின்ற நிலையும் பெண் பிறந்தாலோ கூடவே தரித்திரம் பிறந்தது என்றும், பெண் பிறந்த நாளன்றே மூதேவி தம்மை தொடர்வதாகவும் கருதுகின்ற வழக்கமும் எமது சமூகத்தில் குறைவின்றியே காணப்படுகின்றது. இங்கு பெண் என்ற பால்நிலையின் காரணமாக பிறப்பிலே அவளை ஒதுக்கிவைக்கும் தன்மை காணப்படுகிறது. 

     நாளொரு மேனியும் பொழுதொரு வன்னமும் வளரும் பிள்ளைகளுக்கு மத்தியிலும் ஆண் பிள்ளைகள் என்றால் வாகனங்கள், துப்பாக்கி, பொறிமுறை, கருவிகள் போன்ற சிந்தனையை தூண்டும் விளையாட்டு பொருட்களையும் பெண் என்றால் பொம்மை வீட்டு சமையலறை   பொருட்கள் போன்றன வாங்கி கொடுத்து மறைமுகமாக பெண்  என்றால் இவ்வாறுதான் காணப்பட வேண்டும் என்ற எண்ணத்தை சிறுவயதில் இருந்தே ஊட்டி வளர்க்கின்றனர்.


    காலம் உருண்டோட கன்னியாகும் பெண்ணுக்கு விழாவெடுத்து, மேளம், முரசொளி கொட்டி, உறவினர் சுற்றத்தாருக்கு விருந்து வைத்து, தமது பெண் திருமண தகுதியை பெற்றுவிட்டால் என்று மறைமுகமாக சமூகத்திற்கு அறிவிக்கின்றனர். ஆனால் அவ்விருந்துடன் அப்பெண்ணின் கல்வி தடைப்படும் நிலை என்பது இலங்கையில் பெரும்பாலும் தோட்டப்புறங்களில் காணப்படுகின்றது.  அதன் பின்பு அவள் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனாலும் கல்விகற்ற பெற்றோhர் பெரும்பாலும் கல்விக்கு தடையாக அமையாவிட்டாலும் அதன் பின் அவளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது உண்மையே. அவளது நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் கூட மாற்றமடைய வேண்டுமென சமூகம் எதிர்பார்க்கின்றது. மாலை சூரியன், மறையும் முன் பெண் வீடு திரும்ப வேண்டும். பெண் பிள்ளைகள் அதிகம் சிரிக்ககூடாது. பொறுப்புடன் வீட்டுவேலைகளில் தாய்க்கு உதவ வேண்டும. அடக்க ஒடுக்கமாகவும், கலாசாரத்தினை காவிச்செல்பவர்களாகவும் காணப்பட வேண்டும் என்பதுடன் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற குணங்களோடு வளரவேண்டுமென எதிர்பார்க்கின்றது. ஆனால் ஆண் வளரும் போது எந்த ஒரு கட்டுபாடும் .இல்லாமல் சுதந்திரமாக தனக்குரிய தீர்மானங்களை தானே மேற்கொள்ளக்கூடியவனாகவும் துணிவும் வீரமும் கொண்டவனாகவும் வளர்க்கப்படுகின்றான்.


• திருமணம்
திருமணம் என்று வரும்போது ஆண்கள் பெண்பார்க்க பெண்கள் வீட்டுக்கு செல்வது வழக்கம். இங்கு பெரும்பாலும் பெண் என்பவள் காட்சி பொருளாக கருதப்படுகின்றாள். ஆரம்ப காலங்களில் வீரவிளையாட்டுக்களை நிகழ்த்தி அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பெண்னை கொடுக்கும் வழக்கம் காணப்பட்டாலும் தற்காலங்களில் அந்நிலை மாற்றமடைந்துள்ளது. மேலும் சொத்து வெளியில் செல்லக்கூடாது என்பதற்காக முறைப்பையனை மணம்முடித்து வைக்கும் தன்மையும் பெண் பிள்ளை பிறந்து சில காலங்களிலே மணமகனை நிச்சியம் செய்யும் தன்மையும் காணப்படுகிறது. இங்கு பெரும்பாலும் பெண்ணின் விருப்பு வெறுப்புக்கள் புறக்கணிக்கபடுகிறது. சில சமயம் சொத்துக்காக ஆசைப்பட்டு கிழவருக்கு குமரியை திருமணம் செய்துவைக்கும் தன்மையும் எமது நாட்டில் இல்லாமல் இல்லை. எனினும் தற்காலத்தில் காதல் திருமணம் என்பதும் நடைமுறையில் காணப்படுகின்றது. இளம்வயதினர் காதலிக்கும் காலத்தில் பூங்காவிலும் மற்றும் பொது இடங்களில் சந்திக்கும் போது நடந்துகொள்ளும் விதத்திற்கு ஆண்பெண் இருபாலாரும் பொறுப்பாயினும்  பெண்களையே குற்றம் சுமத்தும் நிலை சமூகத்தில் காணப்படுகிறது. தம் காதலினை வீட்டில் ஏற்றுக்கொள்ளாதவிடத்து வீட்டை எதிர்த்து பிள்ளைகள் தாம் விரும்பிய துணையை அடையும்போது வீட்டில் தாயே குற்றவாளியாக்கப்படுகின்றாள். “பிள்ளையை வளர்த்திருக்கும் விதம் இதுதானா?” என்று தாயை திட்டுகின்ற நிலைமை காணப்படுகிறது. தந்தையும் அதில் பெரும் பங்கினை வகிக்கின்றார்.


     மேலும் திருமணத்தின் பொருட்டு மணமகன் வீட்டார் பெண் வீட்டாரிடம் வரதட்சனை வாங்கும் பழக்கம் உண்டு. புகுந்த வீடு செல்லும் பெண்ணுக்கு குடும்பம் நடத்த தேவையான பொருட்கள் அனைத்தும் சீதனமாக வழங்கப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சீதனமாக கேற்கப்பட்ட பொருட்கள் வழங்கப்படாதபோது பெரும்பாலும் பெண் புகுந்த வீட்டில் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். திருமணம் முடிந்த பின் பெண் என்பவளுக்கு பிறந்தவீட்டு உரிமைகள் பெரும்பாலும் மறுக்கப்படுகின்ற நிலையே இலங்கையில் காணப்படுகின்றது. அவள் தன் கணவனதும் கணவனின் குடும்பத்தினதும் வேலைகளை செய்து கொடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு உற்படுத்தப்படுகின்றாள். கண்ணி பெண்ணொருத்திக்கு மணம் பேசிய பின் திருமணம் நடைபெறாவின் சமூகம் அவள் மீது சந்தேக கண்ணுடனே நோக்குகின்றது. இவ்வாறு திருமனத்தின் போது பெண்கள் பாரபட்சங்களுக்கு உற்படுத்தப்படுகின்றனர் 

     திருமணத்தின் போது பெண்ணின் கன்னிமை  என்பது மிக முக்கியமாக இலங்கையில் நோக்கப்படுகின்றது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு கொள்ளும் போதுதான் இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85% நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் 25% பெண்களுக்கு முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறுவதில்லை. இலங்கையில் திருமணத்தின் பின் கன்னிமை பரிசோதனை என்பது மிக முக்கிய அம்சமாக சகல இனத்தாரிடமும் கருதப்படுகிறது. ஆயினும் கண்டிய சிங்களவர்களுக்கு இது முக்கிய சடங்காகும். இவர்கள் முதலாவது பாலுறவின் போது வெள்ளை விரிப்பில் இரத்தம் பட்டிருக்குமாயின் மணமகளின் 2வது பயணத்தின்போது சிவப்பு ஆடையால் அலங்கரிககப்படுவாள். இல்லையாயின் பகிரங்கமாகவே அவமதிககப்படுவாள். அதாவது 2ம் பயணத்தின் போது வெள்ளை சேலை அணிவிக்கப்படுவாள். 

• இனபெருக்கத்தில் பெண்கள்
   திருமணம் முடிந்து சில காலங்களிலே குடும்பம் தலைப்பதற்கான வாரிசை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாய  நிலை பெண்ணுக்கு ஏற்படுகிறது இங்கு அவளது விருப்பம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. அவள் சுமந்து பெறப்போகும் பிள்ளையை எப்போது பெறவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை கூட அவளுக்கு இல்லை. தற்சமயம் திருமணம் முடிந்து ஓர் இரண்டு வருடங்களுக்குள்ளே குழந்தை பிறக்கவில்லை என்றாள் பெண்ணிடமே குறைப்பாடுவுள்ளது என்று சமூகம் கருதுகின்றது. எனவே அவளுக்கு மலடி என்ற பட்டதையும் அளித்து சுபகாரியங்களின் போது அவளை முன்னாள் வரவிடாமல் தடுக்கின்றது. ஆயினும் அக்குறைபாடு ஆணிடம் காணப்பட்டாலும் பெண்ணே குற்றவாளியாக்கப்படுகின்றாள். பொதுவாக சுற்றத்தரினாலும் உறவினராலும் அப்பெண் மறுத்துவரிடம் செல்லுமாறு வற்புறுத்தப்படுகிறாள். பெண்ணிடம் கருவளம் குறைவடைந்து காணப்படும் போது ஆணின் குடும்பத்தினரால் அவணுக்கு வேறு ஓரு துணையும் தேடிக்கொடுக்கப்படுகிறது. 

• அந்தஸ்து
      சமூக அந்தஸ்த்து எனும்போது பெண்களுக்கு சமூக அந்தஸ்து  மிகவும் குறைவாகவுள்ளது. அவளது முயற்சியால் அவளாகவே கல்விகற்று சட்டங்களும் பதவிகளும் பெற்றாலும் அதற்குரிய அந்தஸ்து கூட பெண் என்ற ரீதியில் நோக்கும் போது சமூகத்தில் குறைவாகவேவுள்ளது. அதிலும் குடும்பத்திற்கு அவளது அந்தஸ்து  மிகவும் குறைவாகவுள்ளது. குடும்பத்தின் சகலரது தேவைகளையும் பூர்த்தி செய்வதில் அவளுக்கு இணையாக ஆண்களால் செயற்பட முடியாது. உதாரணமாக ஆணின்றி பெண்ணானவள் பொருளீட்டி குடும்பத்தை காப்பாற்றுவளாக காணப்படுகிறாள். ஆனால் குடும்பத்தில் பெண்ணினது இழப்பை ஒரு ஆணினால் பூர்த்தி செய்ய முடியாது. ஆனாலும் ஆண்வழி சமூகமே சமூகத்தினால் கொண்டு செல்லப்படுகிறது. ஆணினது பெயரினாலேயே பெண்னை அறிமுகப்படுத்துவதில் கூட முன்னுரிமை வழங்கப்படுகிறது.
• தீர்மாணம் மேற்கொள்வதில் பெண்கள்
      குடும்பத்தில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு தீர்மானமும் ஆணினாலே மேற்கொள்ளப்படுகிறது. குழந்தை பெற வேண்டிய காலம்,  பிள்ளைகளை கல்வி கற்பிக்க போகும் பாடசாலை, வசிப்பிடம், பெண் வேலைக்கு செல்லவேண்டுமா? இல்லையா? என்பனவும் அன்றாட செயற்பாடுளின்போது மேற்கொள்ளவேண்டிய தீர்மானங்களும் வீட்டு தலைவன் என்ற ரீதியில் தந்தை எடுக்கும் தீர்மானத்திற்கு மனைவி பிள்ளைகள் என்போர் தாம் விரும்பியோ விரும்பாமலோ கட்டாயம் கட்டுப்பட வேண்டியுள்ளது. தந்தை இல்லாத வீடுகளில் மூத்த மகனே தீர்மானம் மேற்கொள்கின்றான். மகன் இளையவனாக இருந்தாளும் மூத்த சகோதரிகளும் தாயும் பெரும்பாலும் அவனது தீர்மானங்களுக்கு கூட கட்டுப்பட வேண்டிய நிலை சமூகத்தில் அதிலும் கிராமபுறங்களில் அதிகமாக காணப்படுகின்றது. படித்தகுடும்பங்களில் பெண்ணுக்கு தீர்மானம் மேற்கொள்ளும் போது தனது ஆலோசணைகளை கூறுவதற்கு இடமளிக்கப்பட்டாலும் இறுதி தீர்மானம் மேற்கொள்ளும் உரிமை என்பது ஆண்களுக்கே காணப்படுகிறது. 

• கைமையும் மறுமணமும்
குடும்பத்தில் பெண்ணானவள் தன் கணவனை இழந்தால் விதவை என்ற பெயரினாலே அழைக்கப்படுகின்றாள். அவள் தங்க நகை அணியக்கூடாது, வெள்ளை நிற சேலை உடுத்த வேண்டும், தாலி களையப்படவேண்டும், போன்ற பல கட்டுப்பாடுகள் காணப்படுகின்றது. அதிலும் மலையக சமுதாயத்தில் சில தோட்டங்களில் விதவை பெண்ணுக்கு வெற்றிலை போடுவதற்கு கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வெற்றிலை என்பது மங்கள சின்னம் என்பதால் விதவை அதைபோட கூடாது என்ற கட்டுப்பாடு காணப்படுகிறது.ஆனாலும் இன்றைய சமுதாயத்தில் பெண்கள் இத்தடைகளை மீறி செயற்பட்டாலும் இன்னும்  விதைவைகள் சுப காரியங்களில் தலையிடகூடாது என்ற கட்டுப்பாடு காணப்படுகிறது. அவள் விதைவை ஆயின் தனது குழந்தையின் திருமணத்தினை கூட முன்னால் நின்று செய்வதற்கு தடைவிதிக்கப்படுகிறது. சிலர் விதைவைகளை தெருவில் காண்பது கூட சகுணபிசகாக கருதுகின்றனர்.   மணமுறிவினால் அல்லது கணவனின் இறப்பினால் பெண் வேறு ஒரு துணையை தேடிச்செல்கிறாள். இதனை இன்றைய சமுதாயம் முழுமனதாக வரவேற்றுவிட்டதாக கூறிவிட முடியாது. மனைவியை இழந்தவன் தனக்காகவோ தன் குழந்தைக்காகவோ மறுமணம் செய்துகொள்ளலாம். அதை ஏற்கும் சமூகம் தன் கணவனை இழந்தவலோ கண்ணீரோடு காலம் களிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறது.

சமூகத்தில் ஆண்மீகத்தை வளர்க்கும் சமயத்தில் பால்நிலைப்பற்றிய நோக்கு

     சமூகத்தின் மக்களின் ஆண்மீக செயல்பாட்டிக்காகவே கோவில்களும் மசூதிகளும் தேவாலயங்களும் விகாரைகளும் தோன்றின. அதில் பால்நிலைப்பற்றிய நோக்கு எவ்வாறு காணப்படுகின்றது என்பதனையும் இலங்கையின் அதன் நிலைப்பற்றியும் நோக்குவோம்


• சைவ சமயத்தில் பெண்கள்
   சிவபெருமானை முழுமுதற்கடவுளாக கொண்டு வழிபடும் சமயமான சைவம் உலகப்பெரும் சமயங்களில் ஒன்றாகும் முழுமுதற்கடவுள் தன் உடலில் பாதியை மனைவிக்கு கொடுத்தார். அதன் பொருள் ஆணின் காரிய சித்திகளில் மனைவிக்கும் சமபங்கு உண்டு என்பதாகும்.

மேலும் கல்விக்கு சரஸ்வதியும் செல்வத்திற்கு இலக்ஸ்மியும் வீரத்திற்கு துர்க்கை என பெண் தெய்வங்கள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. ஆனாலும் சமய சடங்கு முறைகளையும் விழாக்களையும் நோக்கும் போது நடைமுறையில் பெண் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாள். வீடுகளிலும் சரி கோயில்களிலும் சரி பூசை செய்யும் அதிகாரம் பெண்களுக்கு வழங்கப்படவில்லை பூசைக்கு தேவையான பொருட்களை தயார்படுத்தி கொடுப்பவளாக மாத்திரமே பெண் காணப்படுகின்றாள். மாதவிடாய் காலங்களில் பெண்ணானவள் அசுத்தமடைந்தவளாக கருதப்படுவதால் அவ்வாறான தினங்களில் கோயிலுக்கு செல்வதற்கும் தடைவிதிக்கப்படுகிறது.

    சைவ பெண்கள் திருமணத்தின் பின் தாலி அணிவதற்கும் உச்சியில் குங்குமம் அணிய வேண்டுமென சைவ சமூகம் எதிர்பார்க்கின்றது. ஏனெனில் அதன் மூலம் அவள் திருமணம் ஆனவள் என்பதனை சமூகத்திற்கு அறிந்து கொள்ளகூடியதாகவுள்ளது. ஆனாலும் ஆண்கள் திருமணத்தின் பின்னும் திருமணத்திற்கு முன் போலவே சுதந்திரமாக திரிகின்றார்கள். எனவே அவர்கள் திருமணம் ஆனவர்கள் என்பதனை இலகுவில் அறிந்துகொள்ள முடியாது உள்ளது. 

  சைவ சடங்கு முறைகளை நோக்குவோமாயின் அதன் ஒவ்வொரு செயற்பாடுகளும் அர்த்தம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. உதாரணமாக ஒரு பெண் பூப்படையும் போது தாய் மாமனால் தேங்காய் உடைக்கப்படுகிறது. இதன் அர்த்தம்  அன்றைய தினத்திலிருந்து ஆண் பெண் இருவரும் வெவ்வேறாக பிரிந்து காணப்படவேண்டும் என்பதாகும். அதே போல் திருமணத்தின்போது கும்பத்தில் தாலி வைக்கப்பட்டு அனைவரின் ஆசிர்வாதத்திற்கும் மண்டபத்தை சுற்றி அனுப்படுகிறது. இதன் அர்த்தம் ஆண்,பெண் இருவரும் தாலின் ஊடாக அனைவரின் ஆசிர்வாதத்துடனும் ஒன்று சேருகின்றனர் என்பதாகும். இச்சடங்கின் மூலம் பெண்ணானவள் சமூகத்தில் இவ்வாறு தான் காணப்படவேண்டும் என்பதை வரையறுப்பதாக அமைகிறது. 

 மேலும் சமய விழாக்களை எடுத்துகொண்டாள் அங்கு ஆண் தலைமைத்துவம் என்பதே முன்னனி வகிக்கின்றது. உதாரணமாக பொங்கல் விழாவினை எடுத்துக்கொண்டால் அதில் சூரியனுக்கு உழவர்கள் நன்றிகடன் செலுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு சூரியன் ஆண் கடவுளாக கருதப்படுவதுடன் அவ்விழாவுக்கு பொங்கல் சமைப்பது முதல் கடவுளுக்கும் ஏனையவருக்கும் படைப்பது முதலான வேலைகளை ஆண்களே மேற்கொள்கின்றனர். ஆனால் இங்கு பின்னனியிலிருந்து பொங்கல் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஆயத்தப்படுத்தி கொடுப்பதிலிருந்து பொங்கல் சமைத்த பாத்திரங்களை கழுவும் வேலை வரையும் வீட்டிலும் சமையலறையிலும் பெண்ணானவள் முடக்கப்படுகின்றாள. இவற்றை நோக்கும் போது  சைவ சமயமானது சமத்துவத்தை வழியுறுத்தினாலும் சமூகம் அதனை சமத்துவமான முறையில் வரையறுக்கவில்லை என்பதாகும்.  

• முகமதிய பெண்கள்

     பெண்ணாய் பிறந்த அனைவரும் மனைவியாகி தாயாகி பாட்டியாகி வாழ்வது உலக பாங்கு ஆனாலும் பெண்ணானவள் உயர்நிலையில் வைத்து போற்றப்படுவது எத்தனைபோ. நாகரீகம் என்ற பெயரில் நாராசமே மலிந்த கிடக்கும் இந்நாளில் பெண்ணாக பிறந்து இறைவனுக்கும் இவ்வுலகிற்கும் ஒருங்கே இசைந்து வாழ்வது மிக கடினமே.


 இஸ்லாம் மார்க்கம் பெண்ணுக்கென சில உரிமைகளையும் சட்டத்திட்டங்களையும் வகுத்துள்ளது. உலகம் ஒய்ய அனுப்பட்ட குர்-ஆனில் பெண்ணின் உரிமைகளுக்கென ஒரு தனி அத்தியாயமே குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டமென குர்- ஆன் வலிறுத்துகிறது. “ஆண்னானாலும் பெண்னானாலும் நற்செயல்கள் செய்து நன்நம்பிக்கை கொண்டார்கள் சுவனபதியில் நுளைவார்கள். ஒரு அணுவும் நீதி தவறி நடத்தப்படமாட்டார்கள்”- குர்-ஆன் 4:124. “ஆண்கள் சம்பாத்தித்தவற்றின் பயனை அவர்கள் அடைவார்கள் பெண்கள் சம்பாதித்தவற்றின் பலனை அவர்கள் அடைவார்கள” - குர்-ஆன் 4:32 இங்கு இஸ்லாம் சமயமும் பெண்கள் சமத்துவத்தினை எடுத்து காட்டுகின்றது. அத்துடன் முஸ்லிம் சமூகத்தில் பால்நிலைபற்றிய நோக்கினை பார்க்கும்போது அங்கு திருமணம் என்பது பெண் உடன்பாடு பெற்றபின்னரே இடம்பெறுகிறது தமக்கு விருப்பமில்லாத திருமணத்திற்கு மறுப்பை தெரிவிக்கலாம்.  அத்துடன் இச்சமூகத்தில் திருமணத்தின்போது மணமகன் ஒரு குறிப்பிட்ட தொகையை (மகர்) பெண்ணுக்கு கொடுக்க கடமைப்பட்டுள்ளான். அத்துடன் இச்சமூகத்திலும் சீதனம் என்பது பெண்ணுக்கு வழங்கப்படவேண்டியது கட்டாயமான ஒன்றாகும். முஸ்லிம் மாந்தருக்கு சொத்துரிமை உண்டு. தந்தையின் சொத்தின் 3:1 பங்கு பெண்ணுக்கு உரித்தடையதாகும் அதேவேளை  தாயின் சொத்து பெண்பிள்ளைக்கு உரித்தாகும். அவளுக்கு அதை விற்கும் உரிமையும் உண்டு.
    முஸ்லீம் பெண்களுக்கு பலதரப்பட்ட ஆடைகள் ஆபரணங்கள் அணியும் உரிமை இருந்த போதிலும் அதை வெளிப்படையாக ஆடவர்கள் முன் காட்டி நடக்க அணுமதியில்லை. இங்கு பெண்கள் பாதுகாப்பு என்பது இதன் மூலம் வலியுறத்தப்படுகிறது. ஆனாலும் இங்கு பெண்கள் விருப்பம் என்பது முக்கியத்துவப்படுத்தப்படவில்லை. இச்சமூகத்தில் பெண்ணுரிமை வழங்கப்பட்ட போதிலுடம் கடமைகளை மறுக்கமுடியாது என்பது வழியுறுத்தப்படுகின்றது. இங்கு கடமைகள் என்பதன் ஊடாக பெரும்பாலும் உரிமைகள் மறுக்கப்படுகின்றது.  “கணவனின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து அவர் நோக்கங்களை நிறைவேற்றி நன் மக்களை பெற்றெடுத்து அவர்களை நற்குணசீலர்களாக வளர்ப்பதுவே முஸ்லீம் தாயின் கடமை என வழியுறுத்தப்படுகிறது.” இங்கு கடமை எனும் பெயரில் பெண்களின் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. இங்கு முழுமையாக ஆணாதிக்க சமூகத்தின் செல்வாக்கினை காணலாம்.   பெண் ஆணினது எண்ணங்களை நிறைவேற்றுபவளாகவும் ஆணுக்கு சேவை செய்பவளாகவும்  காணப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

   இலங்கையில் முஸ்லீம் சமூகத்தில் பெண்கள் கன்னிமை எய்தியவுடன் பெரும்பாலும் திருமணம் முடித்து கொடுக்கப்படுகிறார்கள்.  இதனால் அவர்களின் கல்வி பெரும்பாலும் தடைப்படுகிறது. புத்தகங்களை தூக்க வேண்டிய வயதிலே பிள்ளைகளை வளர்க்கும் பணியில் ஈடுபடுகின்றார்கள். மேலும் முஸ்லீம் பெண்களுக்கு பள்ளிவாசலுக்கு சென்று இறைவழிபாடுகளை மேற்கொள்வதற்கு அணுமதியளிககப்படுவதில்லை. 

  இலங்கையில் சில பிரதேசங்களில் பாராளுமன்றத்திற்கு பெண்களை அணுமதியளிக்கமுடியாது என்ற கருத்தும் முஸ்லீம் ஆண்களிடம் காணப்படுகிறது. “இது ஆண்கள் மீதான பெண்களின் தலைமைத்துவமாகிறது. என்பதை ஆதரமாக கொள்கின்றனர் உண்மையில் அண்கள் பெண்களின் நிர்வாகிகள் என குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது. எனவே பெண்கள் பிரதிநிதியாகும்பட்சத்தில் அவர்கள் ஆண்களின் நிர்வாகிகளாக மாறுகின்றனர்  என வாதாடுகின்றனர். 
  
 கிறிஸ்தவ பெண்கள்
     மனிதர்களின் தோற்றம் பற்றி கிறிஸ்தவம் கூறியுள்ளது. அதில் பெண் என்பவள் ஆணின் விழா எழும்பிலிருந்து உருவாக்கப்பட்டவளாகவும் ஆணுக்கு துணையாக உருவாக்கப்பட்டவளாகவும் கிறிஸ்தவத்தின் வேத நூலான பைபிலின் ஆதி ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு பெண்ணானவள் தனது தோற்றத்திலே ஆணை சார்ந்தவள்  என்றும் ஒரே சரீரமானவள் என்பதும் தெளிவாகின்றது. மேலும் ஒரு பெண்ணினாலே பாவம் என்பது உலகிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் பைபிலில் பழைய ஏற்பாடு கூறினாலும் பாவத்திலிருந்து மக்களை விடுதலை பெற தன்னையே அழித்த கிறிஸ்து ஒரு பெண்ணினாலெயே இவ்வுலகிற்கு தோன்றினார். ஆகவே பாவத்திலிருந்து மனிதனை மீட்ட மீட்பரை உலகிற்கு அளித்த பெண்ணுக்கு மட்டுமே பங்கிக்கப்பட்டது. இயேசுவின் அடக்கத்தை  நினைவுபடுத்தியதும் உயிர்த்த இயேசுவை முதலில் கண்டதும், சாட்சி கொடுத்ததும் பெண்களே. கிறிஸ்துவக்கு பின் பெண்கள் சமத்துவமாக நோக்கப்பட வேண்டும் என்ற கருத்து இம்மத்தில் தோற்றம் பெற்றது.
   கிறிஸ்தவ சமூகத்தை நோக்குவோமானால் இங்கு சமத்துவம் என்பது எல்லாவித்திலும் உள்ளது என கூற முடியாது. சமூகத்தின் எதிர்பார்ப்புக்களினடிப்படையில் இங்கும் பாராபட்சங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. உதாரணமாக ஆரம்ப காலங்களில் பெண் என்பவள் ஆலயத்திற்குள் முக்காடு இட்டிருக்க வேண்டும் என்பது காணப்பட்டது. ஆயினும் ஆண்களுக்கு அவ்வாறு எந்த சட்டதிட்டங்களும் காணப்படவில்லை. நாகரீக வளாச்சியுடன் இவ்விடயங்கள் இல்லாது ஒழிக்கப்பட்டாலும் ஆலயங்களில் பிரசங்கிக்கும் உரிமை என்பது பெண்ணுக்கு வழங்கப்படவில்லை. ஆயினும் கிறிஸ்தவ சமயத்தில் மேற்கத்தைய நாடுகளின் செல்வாக்கு காணப்படுவதால் மேற்கத்தைய நாடுகளில் எய்தப்பட்ட பெண்களின் உரிமைகளின் காரணமாக இச்சமயத்தில் பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான சட்டதிட்டங்கள் கட்டுபாடுகள் என்பன காணப்படுவதில்லை.

• பௌத்த பெண்கள்
    பௌத்த சமயம் எனும்போது அது ஒரு தத்துவமாகவே காணப்படுகிறது. ஆகவே அம்மதத்தின் பெண் என்பவளை வரையறுக்காவிட்டாலும் பௌத்த சமூகத்தில் அவளுக்கு சமஉரிமை வழங்கப்பட்டுள்ளது என கூறமுடியாது. குறிப்பாக இலங்கையை எடுத்து கொண்டால் அங்கு பெரும்பாலும் பிக்குனிகளால் பூசைசெய்யப்படுவதில்லை. மேலும் இலங்கையில் ஸ்ரீமாபோதியில் வெள்ளரசு கிளை சங்கமித்தா என்ற பிக்குனியால் கொண்டுவரப்பட்டாலும் இன்று பெண்கள் கீழ் தளத்திலிருந்தே அப்பொதியை வணங்க முடியும்.   ஆண்களால் மாத்திரமே உயர்தளத்திற்கு சென்ற வழிபட கூடிய நிலை காணப்படுகிறது. இதே போன்று  இலங்கையில் பௌத்தர்களின் பிரதான வணிகஸ்ததளமான தலதா மாளிகையிலும் பெண்கள் கீழ் தளத்திருந்தே வணங்க வேண்டியுள்ளது. இது போன்று பெண்கள் பௌத்த சமூகத்தில் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள். 


3. பொருளாதாரத்தில் பெண்கள்
    இலங்கையின் பொருளாதாரம் மன்னராட்சி காலங்களில் விவசாயமாக காணப்பட்டது. அக்காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் வயல்வெளிகளில் வேலையில் ஈடுபட்டனர். ஆனாலும் ஆங்லேயரின் வருகையுடன் பொருளாதார முறை பெருந்தோட்ட பயிர்களாக மாற்றப்பட்டதுடன் அங்கும் பெரும்பாலும் பெண்களே அதிலும் குறிப்பாக மலையக பெண்களே ஈடுபட்டனர். இவர்கள் பெண் என்ற காரணத்தினால் வேலைக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுவதில்லை. உழைப்பு சுரண்டல் இருந்ததுடன் தலைமை அதிகாரிகளினால்.  பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது அவர்கள் உழைக்கும் சொற்ப பணத்தையும் குடும்ப தலைவன் என்ற ரீதியில் பறித்து கொள்ளும் கணவன் அபபணத்திலெ குடித்து கூத்தாடியதுடன் வீட்டில் வந்து மனைவியை அடித்து துன்புறுத்தும் நிலை காணப்பட்டது. பெண் என்ற காரணத்தினால் அச்சமூகத்தில்  அவள்பெரிதும் பாதிப்புக்குற்படுத்தபடுகின்றாள். 

 இன்றைய பொருளாதாரத்தினை நோக்குவோமானால் அது தைத்த ஆடைத்தொழிற்சாலைகளையே நம்பியுள்ளது. அதில் பெரும்பாலும் பெண்களே பணிபுரிகின்றனர். இப்பெண்கள் மேலதிகரிகளினால் துன்புறுத்தப்படுவதுடன், இரவு வேளையில் வேலைமுடிவடைவதாலும், நகரப்புறங்களில் தங்கும் இடங்களிலும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளனர். இவ்வாறு பல இன்னல்களுக்கு மத்தியில் வேலை செய்தாலும் வேலைக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுவதில்லை. பிரசவகால விடுமுறைகள் கூட ஒழுங்காக பெற்றுக்கொள்ள முடிவதில்லை. மேலும் போக்குவரத்திலும் பெண்கள் பல தொந்தரவுகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

  வறுமையின் காரணமாக வெளிநாட்டில் தொழிக்கு செல்லும்போதும் இதேவிதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். ஆகவே பண்டைய காலம் தொட்டு நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாக இருந்த பெண்கள் இன்னும் சமத்துவமான முறையில் நோக்கப்படுவதில்லை.

4. அரசியலில் பெண்கள்
  பெண்களுக்கு வாக்குரிமை என்பதை சுதேசிகள் எதிர்த்த போதும் ஆங்கிலேயர்கலாளே வழங்கப்பட்டது. ஆயினும் தற்போது நகரப்புறங்களில் பெண்கள் தமது வாக்குரிமை பிரயோகித்தாலும் கிராம புரங்களில் மக்கள் வாக்களிப்பு முறைகளிலுள்ள சிக்கல்கள் காரணமாகவும் தேர்தல் வன்முறைகள் காரணமாகவும் வாக்களிப்பு நிலையங்களுக்கு போவதற்கு தயங்குகின்றனர்.

  இலங்கையின் பெண்கள் உரிமைகள் தொடர்பாக சர்வதேச பிரகடனங்களை ஏற்றுகொண்டுள்ளதுடன் அரசியல் அமைப்பு ரீதியாகவும் இவ்வுரிமைகள் 12வது உறுப்புரையின் கீழ் ஏற்று அங்கரிக்கப்படடுள்ளன. 1993.05.0.3 இலங்கை அரசாங்கத்தினால் பெண்கள் சமவாயம் அங்கரிக்கப்ட்டதுடன் மகளீர் விவகார அமைச்சும் உருவாக்கப்பட்டது. பெண்களை பாதுகாக்கும் சட்டங்களாக கருச்சிதைவு மற்றும் கடும் காயம் விளைவிததல், மானம் பங்கம் செய்யும் நோக்கத்துடன் தொந்தரவு செய்தல், பாலியல் தொல்லைகள், துஸ்பிரயோகம், முறையில்லா புனர்சசி, கற்பழிப்பு என்பவற்றுக்கு எதிரான சட்டங்களும் விவாகம் மற்றும் மணநீக்க சடடம், ஆதனசட்டம், குடும்ப வன்முறை தடுப்புசட்டம் என்பனவும் காணப்பட்டாலும் நடைமுறையில் அவை முழுதும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது என கூறமுடியாது. 

   உலகிலே முதலாவது பெண் அரச தலைவரை உருவாக்கிய நாட்டிலே பெண் ஜனாதிபதி பெண் அமைச்சர்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பெண்கள் அரசியலில் பிரவேசித்துள்ளதனை காணலாம். 1977ல் பாராளுமன்றத்தில் பெண்களின் விகிதாசரம் 2.3 ஆக இருந்ததுடன் 1959, 1995 என்பவற்றில் 5.1 வீதம் ஆக இருந்தனா.; ஆனால் கடந்த தேர்தலில் அது 4 வீதமாக குறைக்ப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் 29 அரசியல் கட்சிகளும் 99 சுயேட்iசை குழுக்களும் 1440 வேற்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் பெண் வேட்பாளர்கள் 117 பேராகும். ஆயினும் 9 பேரே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.  சுமேதா ஜயசேன, பத்திரா வண்ணியாராச்சி,  அமரா பியசிலி, சந்திரானி பண்டார, பேரியல் அஸ்ரப், சோமா குமாரி, சிறியானி பெணான்டோ, அஞ்சன் உம்மா, சுராங்கனி எல்லாவல ஆகியோர் ஆவர் இலங்கையின் சனத்தொகையில் 1/2 அதிகமானோர் பெண்களாயிருந்த போதும் இன்னும் 5% தாண்டி செல்லாத அரசியல் பிரதிநிதித்துவமே காணப்படுகின்றது. கடந்த முறை மகளிர் விவகார அமைச்சர் ஹேமா ரத்நாயக்க பல அரசியல் கட்சிகளை நோக்கி பெண்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.  

5. பெண்களுக்கான கல்வி
   பெண்களுக்கான கல்வி என்பது விஸ்தரிப்பது பற்றி இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. பெண்களுக்கான கல்வி பாடசாலைகள் மிக தூரத்திலுள்ளதினால் தடைப்படும் நிலமையும் காணப்படுகின்றது. இதனால் இதனை தடுப்பதற்கு பெண்களுக்கு தனியாக வீடுகளிற்கு அருகாமையில் பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பெண்கள் கல்விபயில்வதற்கு உரியவர்கள் அல்ல என்ற நிலையை மாற்றுவதற்கு சமூக நிறுவனங்களும் அரசும் முயற்சித்து வந்ததுடன் அதில் வெற்றியும் கண்டுள்ளது. உதாரணமாக இன்று பல்கலைக்கழகங்களை நோக்கும்போது பெரும்பாலும் பெண்களது கல்வியின் அபிவிருத்தி நிலையை காணக்கூடியதாகவுள்ளது.

6. பெண்களுக்கு எதிரான வன்முறை
    பெண்களுக்கு எதிரான வன்முறை வீட்டிலும் வீட்டிற்கு வெளியிலும் மலிந்து காணப்படுகிறது. வீட்டிற்குள் வன்முறை என்பது பெண்களை மன அழுத்ததிற்கு உற்படுத்தல் தனிமைப்படுத்தல் அதிக வேலைப்பழு சுமத்தல் உடல் ரீதியான தொந்தரவுகள் பாலியல் வன்முறை என்பன உள்ளடங்குகின்றது. இவையனைத்தும் எமது நாட்டின் எல்லா பிரதேசங்களிலும் நிறைந்து காணப்படுகிறது. வீட்டிற்கு வெளியே பெண்கள் வன்முறை என்பது நாளாந்தம் தினசரிகளில் இதுவே செய்தியாக மாறியுள்ளது. கிருஷாந்தி, கோணேஷ்வரி, காமலீற்றா, றஜனி, சாரதாம்பால், சுமதி, விஜயலஷ்மி  போன்றவர்கள் எமக்குதெரிந்து யுத்தகாலத்தில் வடகிழக்கில் பாலியல் வன்முறைக்குற்படுத்தப்பட்டவர்கள். தெற்கிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.  ஆயினும் இதுபற்றி வெளிக்கொண்டுவரப்படாத சந்தர்ப்பங்கள் காணப்படுகிறன. இவ்வாறு தெரிந்தும் தெரியாமலும் பல பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறனர்.

முடிவுரை

வீட்டில் தொடங்கும் பெண்ணடிமையே நாட்டில் அரசியல் அடிமைத்தனங்களுக்கும் வலுகோறுகின்றது. வீட்டில் தொடங்கும் பெண் விடுதலையே நாட்டின் அரசியல் விடுதலைக்கும் கருவியாயுள்ளது. இன்றைய பெண்களிடம் முக்காடு இடும் வழக்கம் வீட்டினுள் முடங்கி கிடக்கும் வழக்கம் என்பன நகர்புரங்களில் அரிதாக்கப்பட்டுள்ளது. ஆண்கள் முகத்தை பார்த்தால் கூட தகாத செயலாக கருதும் சமூகத்தின் மடமையை அவர்கள் கருத்திற்கொள்வதில்லை. ஆயினும் இன்றைய இலங்கையில் பெண்கள் போதிய உரிமை பெற்றுவிட்டால் என்று கூற முடியாது. இன்று நகரங்களில் பெண்கள் சிலர் பெருமையும் சிறப்பும் பெற்று விளங்குகிறார்கள். எல்லாத்துறைகளிலும் அவர்கள் முன்னனி வகிக்கிறார்கள்.  ஆனால் இதை வைத்துக்கொண்டு  பெண் உயர்வாக சுதந்திரமும் சமத்துவமும் பெற்று வாழ்கின்றாள் என்று கூற முடியாது. உலகம் அறிய முடியாமல் இரவும் பகலும் சமயலரைகளிலும் தொழிற்சாலைகளிலும் வயல்வெளிகளிலும் தேயிலை தோட்டங்களிலும்  உழைத்து ஓய்ந்து மடியும் பெண்களே அதிகமாகவுள்ளனர்.   இந்நிலைக்கு காரணம் பெண்ணின் சமஉரிமை அற்ற வாழ்க்கையே ஆகும். ஆண்கள் பெண்களை தமக்குரிய காம பொருள்களாகவும் பணிமகளாகவும் நினைத்ததன் விளைவே பெண்ணடிமையாகும். இன்றைய சமூகத்தில் பெண்கள் உச்சநிலையை அடைந்திருக்கும் அதேவேளை மிகவும் அடிமட்டத்தில் இல்லாமலில்லை.
பால்நிலை என்பது சமத்துவமற்ற ரீதியில் வரையறுக்கப்பட்டுள்ள ஒன்றாகும். இலங்கையில் பால்நிலைப்பற்றிய நோக்கானது பெரும்பாலும் சமத்துவமற்ற ரீதியில் காணப்படுகிறது. பெண் என்பவள் சமூகத்தின் தடைகளை மீறி சகல துறைகளிலும் உயர்வு நிலைக்கு வந்திருந்தாலும் அவர்கள் இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாகவே காணப்படுகின்றனர்.   இலங்கையில் பெண்கள் சமூக பொருளாதார அரசியல் ரீதியாக சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றார்கள் என்பதுடன் புறந்தள்ளி வைக்கப்படுகின்றார்கள். அஃறினை உலகத்தில் பெண்ணுரிமைக்கு பழுது நிகழ்ந்ததில்லை ஆறறிவுள்ள உயர்தினை உலகில் பெண்ணுரிமைக்கு பழுது நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணம் மனிதர்கள் மத்தியில் ஆண்களின் தண்ணலமே ஆகும்.




உசாத்துணை நூல்கள்
  •  அ.சண்முகசுந்தரம், (1994), “பாலியல் அரசியல் பற்றிய கோட்பாடு”, காவ்யா பதிப்பகம், பங்களுர்.                                                                               
  • பி.எல்.இராஜேந்திரம், (1994), “பெண்கள் பார்வையில் பெண்கள்” கணேஷ் பிரிண்டஸ், சென்னை.                                                                      
  •  எம். ரி. கௌரி,(2000), “அரசியலில் பெண்கள்”;, பெண்ணின் குரல்.              
  • சி.மௌனகுரு, (2002), “இலங்கையில் சமூக ஜனநாயக சீhத்திருத்த இயக்கங்களின் முன்னோடிகளான தழிழ் பெண்கள” பெண்ணின் குரல்.                                                                                                       
  • ச. தைப்தின், (2002), “இலங்கை அரசியலின் முஸ்லீம் பெண்கள்”இ பெண்ணின் குரல்.                                                                                     
  • சா.சச்சிதானந்தம,; (1989), “பெண்களின் சுவடுகளில் தமிழியல் பதிப்பகம்”, மதுரை.

Post a Comment

0 Comments