மோதல் தீர்வின் தோற்றமும் வளர்ச்சியும். = பகுதி - 1

மோதல் தீர்வின் தோற்றமும் வளர்ச்சியும்.
     இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து நாடுகளிலும் முக்கிய இடத்தை பெற்றிருப்பது இவ் மோதல் பற்றிய எண்ணக்கருவாகும். காரணம் சமூக கட்டமைப்பை நோக்கும் போது தனிமனிதன் குடும்பம் கூட்டுக்குடும்பம், கிராமம், சமூகம் நாடு என்ற ரீதியில் அனைத்து மக்களும் ஏதோ ஒருவகையில் முரன்பாட்டிற்கும் மோதலுக்கும் உள்ளாகக் கூடியவர்களாக உள்ளனர். அதாவது இனம்,மதம், மொழி, வகுப்பு, ஜாதி முதலிய காரணங்களினால் இன்று இத்தகைய மோதல்கள் இடம்பெற்று வருவதைக் காணக்கூடியதாய் உள்ளது. மேலும் மனித அடிப்படை தேவைகள் அடைந்துக்கொள்ள முயற்சிக்கும் போது அதற்கு தடையேற்படும் பட்சத்தில் அது முரண்பாட்டிற்கு இட்டு செல்லும் அதே நேரம் அதன் உச்சக்கட்டமாக மோதலும் ஏற்படுகின்றது. அந்த வகையில் எட்வர்ட் அசார் என்பவரின் கருத்துப்படி “ ஏற்புடைமை பாதுகாப்பை அடையாளப்படுத்தல், பொருளாதார பங்குபற்றல், அரசியல் நிறுவனங்களை ஒரளவு சிறந்த முயற்சி போன்று அடிப்படை தேவைகளுக்காக சமூககங்களுக்கிடையில் நிகழும் வன்முறையே மோதல்” என மோதலுக்கு விளக்கம் தருகின்றார். அத்தோடு சமூகங்களிடையே எற்படும் பிரிவினை பற்றி பேசும் போது பாதுகாப்புக்கான மனித தேவைகளின் ஏமாற்றத்துடன் கூடிய தொந்தரவும் அடையாளத்துவமும் பகிரப்ட்ட நீதியும் காரணமாக அமைகின்றது எனவும் கூறப்படுகின்றது.



     மேலும் சமூகத்தையும் அரசையும் பிரித்து பார்க்கும் போது அங்கு ஏதோவொரு வழியில் முரண்பாடு ஏற்படுகின்றது. மேலும் மக்களது தேவைகள் நிறைவேற்றப்படாத போதும், அவர்கள் புறக்கணிக்கப்படும் போதும் அவர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து தமது தேவைகளை பெற்றுக்கொள்ள அல்லது அடைந்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். முரண்பாடானது ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு தனிநபரால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அது ஒரு குழுவின் மூலமாகவே முன்னெடுத்துச் செல்லப்படும். எனவே ஒரு குறித்த குழுவின் அடையாளம் அச்சுருத்தலுக்கு உள்ளாகும் போது மோதல் தவிர்க்க முடியாததொன்றாக மாறி விடுகின்றது. அந்தவகையில் இனக்கொள்கை, மனித தேவைகள் நிறைவேற்றப்படாமை, அரசின் வகிபங்கும் ஆதிக்கமும், சர்வதேச உறவுகள் முதலியனவும் பாரிய பங்கினை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மோதல், மோதல் தீர்வு என்றால் என்ன
   உலகில் மக்களிடையே எற்படும் அனைத்து முரண்பாடுகளும் மோதலுக்கே செல்லுமாக இருந்தால் இன்று உலகில் மனித இனமே வாழமுடியாது போயிருக்கும். காரணம் நிமிடத்திற்கு நிமிடம் எந்தவொரு வழியிலாவது மக்கிளிடையே கருத்து ரீதியான முரண்பாடு தோற்றம் பெருவதைக் காணலாம். இவ் கருத்து முரண்பாடே பின் மோதலாக உருவெடுக்க காரணமாக அமைகின்றது. எனவே இத்தகைய மோதல்களை தடுப்பதும், அவற்றை கட்டுப்படுத்துவதும் அத்தியவசிய செயற்பாடொன்றாக காணப்படுகின்றது. எனவேதான் அத்தகைய வழிமுறையை காலம் காலமாக மக்கள் கையாண்டு வந்துள்ளமையை காணலாம். எனவே மோதலுக்கு உட்படும் மனித வர்க்கம் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு இனங்குவதும் குறிப்பிடக்கூடிய ஒரு விடயமாகும்.

    அன்மைக்காலங்களை பொருத்தவரையில் இவ்வன்முறையின் வளர்சிக்கு அளவே இல்லாமல் இருப்பதை காணலாம், பத்திரிகை வானொலி, தொலைக்காட்சி, இணையம், சஞ்சிகை எதை பார்த்தாலும் இத்தகைய செய்திக்கு பஞ்சமில்லை.  அந்தளவுக்ககு காலத்திற்கு காலம் இவ் வன்முறையின் அளவானது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த தசாப்தங்களில் நடந்த உலகமகாயுத்தங்களை சற்று யோசித்த்து பாரக்கும் போது இதன் தாக்கத்தை நாம் உணரக்கூடியதாய் உள்ளது. இவ் யுத்தங்களின் பின் மோதல் தீர்வு, மற்றும் சமாதான நடவடிக்கை, சர்வதேச சமாதானம் முதலிய விடயங்கள் பற்றி கருத்தில் கொள்ளப்பட்டாலும் பாரதூரமான வன்முறைகள் குறைக்கப்பட்டதாக தெரியவில்லை. அதாவது இரண்டாம்  உலக யுத்தத்தின் பின்னர் ஆபிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளை பொருத்தவரையில் புதிய நாடுகள் தோற்றம் பெற்றன. இவ் நாடுகளில் இன யுத்தங்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்தது. இவ் நாடுகளில் கணரக ஆயுதங்களை பயன்படுத்தி இம்மோதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் சிறிய ஆயுதங்களே அதிகமாக பயன்படுத்தப்பட்டன இந்த நிலையானது அதிக ஆபத்துக்களை விளைவிப்பவனவாக இருந்தது. காரணம் ஆயுதங்கள் விலை குறைவாக இருந்ததோடு இலகுவாக கொண்டு செல்லக்கூடிய அதே நேரம் எவராலும் பயன்படுத்தக்கூடிய தன்மையுடையதாக காணப்படுகின்றமை குறிப்பிடப்படுகின்றது. உதாரணம் இந்தியாவில்  இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல், இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதல்களை குறிப்பிடலாம். 


  எனவே காலத்திற்கு காலம் இத்தகைய மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்றமையால் காலத்திற்கு காலம் அதன் தேவைக்கருதி மோதல்களை தீர்த்து வைப்பதற்கும் அவற்றை கட்டுப்படுத்தி மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. அதன் விளைவாக தோற்றம் பெற்றதே மோதல் தீர்வியல் எனும் கற்கைநெறியாகும். இத்தகைய மோதல் தீர்வு கற்கை நெறியானது வளர்ச்சியடைந்து வர வேறு சில காரணங்களும் உதவிப்புரிவனவாக உள்ளன.



  அதாவது இன்று நீதிமுறைமையில் உள்ள குறைபாடுகள் குறிப்பிடக்கூடியதாகும் அதாவது மோதல்களை தவிர்ப்பதற்கான விளக்கங்களையும் தீர்வினையும் தரக்கூடிய நீதிமன்றங்கள் விரைவாக செயற்படாத தன்மையானது இத்தகைய மோதல்கள் தொடர்ந்து நீண்டு செல்வதற்கு காரணமாக அமைகின்றது. அது மட்டுமன்றி இவ் நீதிமன்றங்களின் காலத்தாமதமானது மேலும் மக்களுக்கு கால வீண்விரயத்தை ஏற்படுத்தின் அதே நேரம் பொருளாதார ரீதியிலான நிதி வீண்  விரயத்தையும் ஏற்படுத்தின. அவ்வாறு ஒரு குறித்த மோதல் நீதி மன்றத்தில் தீர்த்து வைக்கப்பட்டாலும் தீர்த்துவைக்கப்பட்ட இடத்தில் இருந்து மற்றுமொரு மோதல் ஆரம்பமாகும் காரணம் ஒரு தரப்பு பூரணமாக வெற்றியையும் மற்றைய தரப்பு தோல்வியையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமைவதாகும். அதாவது நீதிமன்றங்களின் தீர்பபுகள் வாதாட்ட திறமையுள்ள தரப்பினர் பக்கம் வெற்றியை தருவதால் குறித்த ஒரு பகுதி மட்டும் தமது விருப்பை அடைந்து கொள்கின்றனர் எனவே மற்றைய தரப்பினர் தொடர்ந்து மோதலுக்கான காரணங்கள் நிறைவேற்றப்படாமல் அவர்களின் அதற்கான காரணங்கள் அடிமனதில் பதிந்து விடுவதால் அவை திரும்ப திரும்ப மோதல்களில் ஈடுப்பட நேருகின்றது. தோல்வி கண்டவர்களுக்கு மாற்று வழிகள் கூறப்படவில்லை எனவே அவர்களிடத்தில் சமூக உறவை வளர்க்க கூடிய செயற்பாடுகளையும் நீதிமன்றங்கள் செய்ய தவரவிடுகின்றன. எனவேதான் அதற்கான ஒரு மாற்றிடாக மோதல் தீர்வானது முன்வைக்கப்பட்டது.



  அதனைத்தொடர்ந்து இக்கற்கை நெறியின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மற்றுமொரு காரணமாக சர்வதேச உறவுகள் பாடத்துறையில் உள்ள குறைப்பாடுகளை நாம் எடுத்து நோக்கலாம். அதாவது சர்வதேச உறவுகளின் பிரதான குறைப்பாடாக நாம் நோக்குவது யாதெனில் இது யுத்தம் தொடர்பாகவே அதிகம் கவனம் செலுத்தியது. அதனையே எல்லா நாடுகளிலும் பரவச்செய்தது. ஆனால் சமாதானத்தைப் பற்றியும் அதன் தேவை, மற்றும் அதனைக்கட்டியெழுப்புதல் முதலிய விடங்களை ஏற்படுத்தவில்லை அதுமட்டுமன்றி சமாதான தொடர்பான ஆய்வு நிறுவனங்களையோ தோற்றுவிக்கவில்லை. எனவே மக்களிடையே நல்லுறவையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தக்கூடிய சூழல் இல்லாமல் போனது. இதுவொரு பாரிய குறைபாடாக இருந்தது.


  அந்தவகையில் இவற்றைக் கருத்தில் கொண்டு மோதலுக்கு பின் நிரந்தரமானதொரு நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் செயற்பட கடந்த நூற்றாண்டின் அரைப்பகுதியில் தோற்றம் பெற்ற  மோதல் தீர்வு என்ற கற்கை நெறியானது இன்று மிகவும் பிரசித்தி பெற்றதொரு கற்கை நெறியாக மாற்றம் பெற்று  வளர்ச்சியடைந்து வந்துள்ளமையையும் காணலாம். ஆரம்பத்தில் பிரித்தானியா, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இப்பாடநெறியானது இன்று அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்.
மோதல் தீர்வு அணுகுமுறைகள்
  மோதல் தீர்வு அனுகுமுறைகள் என நோக்கும் போது மோதல் உருவாக்கமானது பல்வேறநோக்கங்களின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் எனவே குறித்ததொரு அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும் என்ற வரையறைக்கிடையாது. மோதலின் நிலைப்பாடு அதன் தன்மை அதன் வளர்ச்சிகட்டம் முதலியவற்றைக் கருதத்திற் கொண்டு தேவைக்கேற்ப வித்தியாச வித்தியாசமான அணுகுமுறைகளை பின்பற்றலாம். இத்தகைய தந்திரோபாய நடவடிக்கைகள் மோதற் தீர்வு நடடிவடிக்கைகளுக்கு அவசியமான நெகிழ்ச்சித்தன்மையை வழங்குகின்றது. இவ்வேறுபட்ட தந்திரோபாயங்ககள் மோதல் தீர்வு அணுகுமுறைகள்  அல்லது எண்ணக்கருக்கள் என அழைக்கப்படகின்றது. அதனடிப்படையில் மோதல் தீர்வு அணுகுமுறைகளாக கீழ்வரும் யைந்து விடயங்களை நாம் அடையாலப்படுத்த்திக் கொள்ளலாம்.
• மோதல் தடுப்பு
• மோதல் நிர்வாகம்
• மோதல் இடைத்தீர்வு
• மோதல் தீர்வு
• மோதல் நிலைமாற்றம்
முதலிய ஐந்து விடயங்களும் மோதலை எவ்வாறு முகாமைத்துவம் செய்து அதனை முடிவுக்கு கொண்டு வருவதோடு மோதலில் ஈடுப்படும் தரப்பினரிடையே புரிந்துணர்வையும் நல்லிணக்கப்பாட்டினையும் ஏற்படுத்தும் நிலையினை நாம் அவ் தலைப்புகளின் அடிப்படையில் நோக்கி செலல்லாம்.


• மோதல் தடுப்பு
  மோதல் தீர்வு கற்கை நெறியில் மோதல் தடுப்பு என்பது முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது. அதனடிப்படையில் மோதல் தடுப்பு என்பது  மோதல் வெளிப்படையாக தோன்றுவதற்கு முன்பாக அதனை ஆரம்பத்திலயே கண்டு அதனை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் நிலையாகும். அதாவது கருத்தியல் ரீதியாக ஏற்படுத்தப்பட்ட ஒரு விடயமாக காணப்படும் அது தொடர்ந்து வழுபெற அது இரு தரப்பினரிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் எனவே அத்தகைய கருத்துக்களை ஆரம்பத்திலையே இனங்காணுவதை இது குறித்து நிற்கின்றது. மேலும் மோதலானது வெளிப்படையாக தோற்றம் பெற்று தீவிரம் பெறுவதற்கு முன்னரே அவற்றை சரியான மாற்று வழிகளைக் கொண்டு தடுத்துவிடுவது செயற்திறன் மிக்கதாகும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதே மோதல் தடுப்பு அணுகுமுறையாகும். இத்தகைய மோதல் தடுப்பு தொடர்பாக அறிஞர் மிச்செல் கருத்து தெரிவிக்கும் போது மோதல் தடுப்பானது இரண்டு முறையில் மேற்கொள்ளப்படுகின்றது என்கிறார். அந்தவகையில் அவர் கூறும் அத்தகைய இரு விடயங்களாக
1. மோதல்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னமே அதற்கான காரணங்களை     இனங்கண்டு அவற்றை தடைசெய்தல்                                                         
2. மோதல்கள் தோற்றம் பெற்றநிலையில் அவை ஏற்றுக்கொள்ளப்ட்ட    
     நடத்தை விதிகளை தாண்டாதிருப்பதை உத்தரவாதப்படுத்துவதற்கான  
     நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

             இத்தகையதொரு நிலைமையில் மோதல் பற்றி கவன ம் செலுத்த இன்று உலக நாடுகளிற்கு மத்தியஸ்தம் வகிக்கும் ஒரு நிறுவனமாக ஐக்கியநாடுகள் சபையானது இவ் மோதல் தொடர்பாக இன்று அதிக கவனத்தை செலுத்தியுள்ளதை நாம் காணலாம். அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையானது மோதல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மோதல் தடுப்பு அணுகுமுறையானது சிறந்ததெனக் கருதுவதோடு அதனை பின்பற்றுவதும் குறிப்பிடத்தக்கது. காரணம் இவ் அணுகுமுறையானது செலவு குறைவு என்பதாலும் இலகுவாக செயற்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



     மேலும் மோதல் தடுப்பு முறையில் நெருக்கமாக பிணைக்கப்பட்ட ஒரு விடயம் யாதெனில்  முனட்னெச்சரிக்கை முறைமையாகும்.  முன்னெச்செரிக்கை முறை என்பது மோதல்கள் எற்படுவதற்கு அல்லது தீவிரப்படுவதற்கு உள்ள சாத்தியத்தை எதிர்வு கூறும் வகையில் தகவல்களை சேகரித்தல்,ஆய்வு செய்தல், முடிவுகளைப் பரப்புதல், ஆகியவற்றை உள்ளடக்கிய செயன்முறையே முன்னெச்சரிக்கை  முறையாகும். இத்தகைய முன்னெச்சரிக்கை முறையில் முக்கியமானதொரு விடயமாக குறிக்காட்டிகளை கட்டியெழுப்புவதாகும். அதாவது குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக சில குறிகாட்டிகளை ஏற்படுத்தி அதன்வழி செயற்படல். மேலும் முன்னெச்சரிக்கை முறைமை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டோர் மோதல் தடுப்பிற்கு வன்முறையை எதிர்வு கூறுதல் மட்டும் போதாது மாறாக அவற்றை எவ்விதம் கையாலளாம் என்ற உபாயங்களையும் ஏற்படுத்துவது அவசியமானதென வாதிடப்படுகின்றது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை முறைகள் தற்போது எதிர்வு கூறப்பட்ட மோதல்களை கையாள்வதற்கான தந்திரோபயங்களையும் உள்ளடக்கியதாக செயற்படுவதால் இன்று இச் செயற்பாடானது அபிவிருத்தியடைய ஆரம்பித்துள்ளது.


    மோதல் தடுப்பு முறையில் முன்னெச்சரிக்கை முறையை பின்பற்றும் போது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது சூழலிலோ மோதல் தோற்றம் பெறுவதற்கு வாய்ப்பானது அதிகமாக உள்ளது என அறியப்படும் சந்தர்ப்பத்தில் இரு தரப்பினரிடையே நம்பிக்கையை கட்டியெழுப்புதல், இவர்களுக்கு மத்தியஸ்தம் செய்தல், பேச்சுவார்த்தைகளை எற்படுத்திக் கொடுத்தல்  முதலிய செயற்பாடுகளன் மூலமாக மோதலை தவிர்த்துக் கொள்ளலாம். அல்லது இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளத்தக்க மாற்று நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு மோதல் தவிர்ப்பை உருதிப்படுத்திக் கொள்ளலாம். அதனடிப்படையில் எத்தகைய செயன்முறையை மேற்கொண்டாலும் அவை மோதல் தடுப்பில் ஆரோக்கியமான சமூக மாற்றங்களை தடுப்பதாகவும் அமைதல் வேண்டும்.

• மோதல் நிர்வாகம்
      மோதல் தடுப்பை தொடர்ந்து மோதல் நிர்வாகம் தொடர்பாக பார்க்கும் போது இது மோதலானது இல்லாமல் போகும் தன்மையுடையதாக காணப்படுகின்ற போது முன்னெடுக்கப்படுகின்றதொரு அணுகுமுறையாகக் காணப்படுகின்றது. இது முக்கியமாக வன்முறை அல்லது அழிவை ஏற்படுத்தக்கூடிய விடயமாகும் எனவே அத்தகைய விடயங்களில் அதிகம்  கவனமெடுத்தல் வேண்டும். எனவேதான் இவை நிருத்தப்படவோ அல்லது தடுக்கப்படவோ வேண்டியதொன்றாகக் காணப்படுகின்றது. அது மோதல் தீர்வின் ஒரு முன் நிபந்தனையாக  என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற தந்திரோபாயமே  மோதல் நிர்வாகமாகும்.  எனவேதான் மோதல் நிர்வாகத்தை முன்னெடுக்கும் போது அங்கு மோதலை தவிர்ப்பதற்காக அல்லது தடப்பதற்கு முயற்சிக்கும் போது ஆரம்பத்தில் கூறப்பட்டது போன்று மோதல் தடுப்பு என்பதுபோல் அல்லாமல் இங்கு அதற்கான காரணங்கள் பற்றி கருத்தில் கொள்வது குறைவாகவே காணப்படும். அவ்வகையில் இது மட்டுப்படுத்தப்ட்ட ஒரு அணுகுமுறையாக மட்டுமல்லாது மோதல் தீர்வு பற்றிய குறுகிய நோக்கமுடையது. அதன் காரணமாகவே மோதல் நிர்வாக அணுகுமுறை  ஏனைய தீர்வு தந்திரோபாயங்களுடன் இணைந்த வகையில் முன்னெடுக்கப்படுவது அவசியமாகின்றது. உதாரணமாக 2002ம் ஆண்டு இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக நோர்வே அரசாங்கத்தின் தலையீடும் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் பணிகளும் ஒரு வகையில் மோதல் நிர்வாக முறையின் ஒரு அங்கமாகும்.


• மோதல் இடைத்தீர்வு

      அதாவது நீண்டு செல்லும் சமூக மோதல்களை தடுப்பதற்கு இம்முறை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதாவது தீவிரமான நீண்டகாலம் நிலைத்திருக்கும் மோதல்களிற்கான காரணிகள் உறுதியானவையாக இருப்பதன் காரணமாக இவை இலகுவாக கையாளப்படவோ அல்லது தீர்க்கப்படவோ  முடியாது.  எனவேதான் மோதலுக்கான காரணங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும். அது மட்டுமன்றி தீவிரத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும் மோதல்கள் அதிக அழிவைத் தரக்கூடியதாய் அமைவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான போர்களை நாம் நினைவு கூறலாம். மோதலின் அடிப்படை பிரச்சினைகள் தீரப்படும் வரை வன்முறையை விட்டுவைப்பது புத்திசாலித்தனமானதல்ல. எனவே மோதலின் உடனடியாக பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் வன்முறையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படுவதே மோதல் இடைத்தீர்வாகும். இவ்வணுகுமுறையிலும் உடனடிப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால் மோதலின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிய கரிசனை குறைவாகவே உள்ளது.



    மேலும் இவ் அணுகமுறையை நோக்கும் போது ஒரு மோதல் முறைமையில் மிக உயர் மட்டத்தில் இருக்கக்கூடிய அரசியல் தலைவர்கள், இராணுவத் தலைவர்கள், அரசியல் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தக்கூடிய தனிநபர்கள் மீது அதிக கவனம்   செலுத்தப்படும். காரணம் இவர்களாலையே உடனடியாக வன்முறையை நிருத்துவதற்கான கட்டளைகளை பிறபிக்க முடியும். அது மட்டுமன்றி தற்காலிகமாக போரை நிறுத்துவதும் அதனை சமாதான பாதையை நோக்கி செல்வதற்கு துணைப்புரிவதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய முறைமையில் மோதலில் தற்காலிக தீர்வு நோக்கங்களை அடைந்துகொள்ளும் முகமாக உத்தியோக பூர்வ , உத்தியோகபூர்வமற்ற  உபாயங்கள் கையாளப்படலாம். உதாரணமாக இலங்கை விவகாரத்தில் மூன்றாம் தரப்பாக நோர்வே வந்து சமரச நிலையை ஏற்படுத்த முனைந்ததைக் காணலாம். அதாவது 2002ம் அண்டு இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட யுத்தநிருத்த ஒப்பந்தத்தை குறிப்பிடலாம். இத்தகைய ஏற்பாடும் மோதல் இடைத்தீர்வின்மூலம் ஏற்படுத்தப்பட்டதொரு விடயமாக காணப்படுகின்றது. அதன்வழி இரு தரப்பினருக்கிடையில் ஒரு சுமூகமான போக்கை ஏற்படுத்தி மீள்கட்டுமான விடயங்களில் ஈடுப்பட முயற்சித்தமைமையும் குறிப்பிடத்தக்கது.


     ஆக ஏனைய அணுகுமுறை போன்று இவ் அணுகுமுறையையும் தனியே முன்னெடுப்பது என்பது சாத்தியமானதொரு நிலையன்று. ஏனெனில் இங்கு மோதலானது மனித வாழ்க்கையின் அடிப்படை பிரச்சினைகளாக தோற்றம் பெற்றவவையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது சமூக அநீதி, அச்சம், அவநம்பிக்கை, போன்றவை தீர்வு காணப்டாமல் அவ்விதமே இருக்கும். இவை மீண்டும் மோதல், வன்முறை என்பவற்றை தோற்றுவிக்காது என்பதற்கு எவ்வித உறுதியும் இல்லை. ஆகவே மோதல் இடைத்தீர்வு அணுகுமுறையும் கூட ஏனைய மோதற் தீர்வு தந்திரோபாயங்களுடன் ஒன்றுசேர்ந்தவையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இத்தகைய நிலைப்பாட்டை உடையதாக மோதல் இடைத்தீர்வானது காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது. 

• மோதல் தீர்வு
   இச்செயற்பாடானது மோதல் செயற்பாட்டில் மிக முக்கியமானதும் கவனமாக எடுத்து செல்லவேண்டிய தேவையும் உள்ளது. அதாவது  மோதல் தீர்வு நீண்ட காலத்தில் முன்னெடுக்கப்படுகின்ற ஆழமானதொரு செயன்முறையாகும். ஏனெனின் இவ்வணுகமுறையானது பிரதான இலக்கை நோக்கியதாக உள்ளது  அதாவது மோதலுக்கான  அடிப்படை காரணிகள் கண்டறியப்பட்டு தீர்க்கப்படாத போது ஒரு மோதல் நிரந்தரமாக நிறுத்தமுடியாது. இடைக்காலத்தல் நிறுத்தப்பட்டிருக்கும் எந்தவொரு மோதலும் மீண்டும் பூகம்பமாக வெடிக்க நேரமாகது. எப்போது வேண்டுமானாலும் அது மீண்டும் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ஒரு மோதலின் அடிப்படை காரணத்தை இணங்கண்டு அதனை அடியொடு இல்லாதொழிப்பதே சரியான செயற்பாடு இவ் அணுகுமுறையின் செயற்பாடாக காணப்படுகின்றது. மேலும் இவ் மோதல் தீர்வில் முக்கியமாக சல விடயங்கள் இடம்பெரும் அவையாவன பேச்சுவாரத்தை, மூன்றாம் தரப்பு தலையீடு, ஆலோசனை வழங்கள் முதலிய வன்முறையற்ற செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கனவாகும்.


      மேலும் குறிப்பிட்டதொரு மோதலானது வன்முறையூடாக தீர்க்கப்படும் போது அங்கு குறிப்பிட்ட ஒரு தரப்பு பூரணமாக வெற்றியை பெற்றுக்கொள்ள இன்னொரு தரப்பினர் தோல்வியை அடைந்துக் கொள்கின்றனர். எனவே இங்கு பூரணமான முறையில் தீர்வுகள் முன்வைக்கப்படாத நிலைமையானது குறிப்பிடத்தக்கது. இது உன்மையான தீர்வாக அமையாது. ஒரு தூய மோதற் தீர்வின் இறுதியில் இரு தரப்பினரும் தமது விருப்பங்களையும் தேவைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மையுடையதாக இருத்தல் வேண்டும். இத்தகைய ஒரு நிலை இரு தரப்பினரிடையே ஏற்படும் புரிந்துணர்வின் வழி ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகவே காணப்படும்.  உன்மையான மோதல் தீர்வு சமூக நீதியை  உறுதிப்படுததுவதாகவும்  மோதற் தாரப்பினரின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் அமைந்திருக்கும். எனவே உண்மையான மோதலுக்கான தீர்வின் முடிவுக்கு வருவதென்பது கடினமானதொரு செயற்பாடாகும்.

   இவ்வாறாக மோதல் இடைத்தீர்வுடன் ஒப்பிடுகையில் மோதல் தீர்வு செயன்முறை பரந்த ஒரு விடயமாகும். ஏனெனில் உயர்மட்ட தலைவர்களை மட்டும் உள்ளடக்கியதல்ல. மாறாக அது சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் உள்ள செயற்பாட்டாளர்களை உள்ளடக்கியதாகும். அதாவது மோதல் தீர்வில் உயர்மட்ட அரசியல் தலைவர்களுக்கு மட்டுமன்றி கீழ்மட்டத்தில் செயற்படுகின்ற தலைவர்களும் சாதாரண மக்களுக்கும் பாரிய பங்குண்டு. அந்தவகையில் அறிவுபடைத்த புத்திஜீவிகள், சமூக கோட்பாளர்கள், கொள்கைவகுப்பாளர்கள், மதகுருமார்கள் முதலியோர் முக்கியதொரு பங்குதாரர்களாக இச்செயற்பாட்டில் பங்கெடுக்கின்றனர். இவர்கள் இத்தகைய மோதற் தீர்டவில் தீர்க்கமான செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமாயின் புரிந்துணர்வும், நம்பிக்கையும், விட்டுக்கொடுப்பும் அவசியமானதாக உள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.  
                                                                                                                             தொடர்ச்சி = பகுதி - 2











Post a Comment

0 Comments