“ஆய்வு” ஓர் பொது அறிமுகம் = பகுதி - 01


   

ஆய்வு என்பது உண்மைமையினைக் கண்டறியும் புலமைப்பயிற்சி ஆகும். விதிகள், சந்தர்ப்பங்கள், தோற்றப்பாடுகள், பண்புகள், அமைப்புக்கள், கூறுகள், அலகுகள் எவற்றை அடிப்படையாகக் கொண்;டு ஆய்வுகளை உருவாக்கலாம். ஆய்வு வரலாற்று வளர்ச்சியில் மெய்யியலாளர்களின் பங்கும் பணிகளும் சிறப்பிடங்களைப் பெற்றிருந்தன. மெய்யியலாளர்கள் தர்க்க முறைமை அல்லது அளவையியல் முறைமையைப் (Logical Method பயன்படுத்தி மெய்மையை அறிய முற்பட்டார்கள் அளவையியல் முறைமையை அடிப்படையாகக் கொண்டே கணிதக் கல்வியும் தீவிர வளர்ச்சியுற்றது.

     அளவையியல் முறைமை ஆய்வுகளைத் தொடர்ந்து, விஞ்ஞான முறைமை, ஆய்வியல் வரலாற்றிலே பெரு வளர்ச்சியடைந்தது. விஞ்ஞான முறையின் முக்கியமான பண்பு, அனுபவநிலை பரீட்சித்தலுக்கு (Empirically Testable)  வழியமைத்தலாகும். இன் நிலையில் பரிசோதனைகளே மெய்மையைக் கண்டறிவதற்குரிய திறவுக்கோள் என விஞ்ஞான ஆய்வுகளில் கருதப்பட்டது. விஞ்ஞான முறைமையை செம்மைப்படுத்துவதற்கு அளவையியல் முறைமை தொடர்ந்தும் உதவிவருகின்றது. ஆய்வு என்பது தொடர்ச்சியான தேடலை முன்னெடுக்கின்றது. தேடல் தொடர்ச்சியாக இருப்பதனால் அதற்கு முடிவில்லை. அறிவின் எல்லைகளை ஆய்வுகள் முன்னோக்கி நகர்த்திய வண்ணமுள்ளன. முடிவில்லாத ஆய்வு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து இன்று வளர்ச்சியுற்று வருகின்றது. அடிப்படைகளை நோக்கிய ஆய்வுகள், பிரயோகங்களை நோக்கிய ஆய்வுகள், பயன்பாடுகளை முன்னெடுக்கும் ஆய்வுகள் என்ற பெரும் கிளைகள் வளர்ச்சியுற்றன. இயற்கை விஞ்ஞானங்களில் பெரும்பாலும் பரிசோதனை முறைமைகள் வழியாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. சமூக விஞ்ஞானங்களில் ஆளவையியலை அடியொற்றிய பல்வேறு ஆய்வு முறைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

   அறிவைத் தேடுதலே ஆய்வாகின்றது. அறிதொறும் அறியாமை புலப்படுவதால் ஆய்வு என்பது தொடர்ச்சியான செயல்முறையாகின்றது. புதிய அறிவைத் திரட்டுவதற்குரிய ஒழுங்கமைந்த செயல் முறையே ஆய்வில் முன்னெடுக்கப்படுகின்றது. ஆய்வென்ற கல்விச் செயல்முறை அறிந்ததில் இருந்து அறியாததை நோக்கிச் செல்லும் இயக்க விசையாகின்றது. ஆய்வின் வழியாக கண்டுபிடிப்புக்கள் நிகழ்கின்றன. புத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.

 ஆய்வு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள்
 ஆய்வு என்பதற்கான சரியான தெளிவான வரைவிலக்கணப்படுத்தப்படாததால் அவ்வரைவிலக்கணத்தை அளவுகோலாகக் கொண்டு ஆய்வின் இயல்பு, செயல்முறை, குறிக்கோள் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் ஆய்வை மதிப்பீடு செய்ய முடியும். அவ்வகையில் சில வரைவிலக்கணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் சில பின்வறுமாறு:


லுன்ட்பேர்க் (Lundberg)  என்பவர் - “அவதானிக்கப்படும் தரவுகள் வகைப்படுத்துதல், நிரூபித்தல், ஆகிய முறைகளை ஒழுங்குப்படுத்துவதற்கு வழிவகுக்கின்ற செயல்முறையே ஆய்வு எனப்படும்” 

 கேர்லிங்கர் (Karlinger)  என்பவர் “ ஒழுங்குப்படுத்தப்பட்டஅல்லது கட்டுப்படுத்தப்பட்ட சில புலனாய்வுகளையும் கருதுகோள்களையும் உருவாக்கி அவற்றை இயற்கையுடன் தொடர்புப்படுத்துவதே ஆய்வு” என்கின்றார்.

 குக் (Cook P.M) என்பவர் “இனங்காணப்பட்ட ஓரு பிரச்சினைக்கான தகவல்களையும் அதனுடைய கருத்துக்களையும் உண்மையாகவும் யதார்த்த பூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் இனங்காணல் அல்லது தேடுதல்” என விளக்கியுள்ளார். 

 ஆய்வின் பண்புகள்.
1. ஆய்வின் நோக்கங்களும், குறிக்கோள்களும் தெளிவாக வரையறை  
    செய்யப்பட்டிருக்கும்.
2. போதுமான தகவல்கள், தரவுகள் முதலியவற்றின் திரட்டல்களை 
   உள்ளடக்கியிருக்கும்.
3. பொருத்தமான முறையியல்களை பயன்படுத்தியதாக இருக்கும்.    
4. நன்கு திட்டமிடப்பட்டதாக இருக்கும்.                                                        

5. புறவயமான அணுகு முறைகளையும், பக்கம் சாராததும், முற்சாய்வு 

   கொள்ளாததுமான பண்புகளையும் உள்ளடக்கியிருக்கும்.                       
6. போதுமானதும், பொருத்தமானதுமான தரவுகளில் இருந்தே முடிவுகளை
   அண்மித்ததாயிருக்கும்.                                                                   
7. முன்னர் ஒளிவீசப்படாத தரிசனங்கள் மீது ஒளி பாய்ச்சப்பட்டிருக்கும்  
8. ஆய்வுக்குரிய தருக்கத் தெளிவுடையதாயிருக்கும்.                            

9. ஆய்வுக்குரிய மொழிச் செறிவு மற்றும் மொழிக் கட்டுமானம் 

   முதலியவற்றைக்    கொண்டிருக்கும்.
10. ஆய்வின் சமர்ப்பணம் செவ்விதமாக அமைந்திருக்கும். 
      ஆய்வு தொடர்பாக நமது நாட்டில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் பற்றியும் அடுத்து நோக்க வேண்டியுள்ளது. ஆய்வுக்குரிய போதுமான பயிற்சிகள் முனனெடுக்கப்படாமை ஆய்வுப் பண்பாடு (Research Culture)  வலிதாகக் கட்டியெழுப்பப்படாமை, ஆய்வு மேற்பார்வைக்குரிய ஆளணியின் போதாமை, ஆய்வுக்குரிய ஊக்கல் போதாமை, அறிவு வசதிகளிலும் வளங்களிலும் வற்கடம் காணப்படுதல். தகவல்கள் மற்றும் தரவுகள் பெறுதலிலே பல்வேறு இடர்பாடுகள் காணப்படுதல். முதலாம் பிரச்சினைகள் பற்றியும் ஆய்வாளர்கள் மனங்கொள்ள வேண்டியுள்ளது. 

ஆய்வு முன்மொழிவு: அறிமுகம்
           ஆய்வு முன்மொழிவு என்பது மேற்கொள்ளப்பட உள்ள ஆய்வுக்கான ஒரு மாதிரி செயற்றிட்டம் அல்லது தற்காலிக செயற்றிட்டம் ஆகும். ஆய்வின் முன் மொழிவானது தேவைப்படும்போது ஆய்வு நடவடிக்கைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாகும். அதன் வடிவமைப்பானது தெளிவானதாகவும் சுருக்கமானதாகவும் அமையப் பெறும். மேலும் அவ் ஆய்வு முன் மொழிவில் ஆய்வாளர் மேற் கொள்ளவுள்ள அணுகு முறைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். அதனை ஆய்வின் படிமுறை எனும் பகுதியில்  தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு சுருக்கமாக நோக்குவோம்.  ஆய்வு முன் மொழிவின் வடிவமைப்பானது மேற் கொள்ளப்படும் அய்வு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வின் தன்மைக்களுக்கு ஏற்ப வேறுபட்டுக் காணப்படும் எந்த ஓர் அய்வு முன்மொழிவும் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வின் தேவையை அடிப்படையாகக் கொய்டதாகவே வடிவமைக்கப்படுகின்றது. சில ஆய்வு முன்மொழிவுகள் நிதி வழங்குநர்களிடமிருந்து நிதி உதவிகளைப்  பெறும் நோக்கில் வடிவமைக்கப்படும். எனினும் சகல ஆய்வு முன்மொழிவுகளும் சில பொதுவான அடிப்படை அம்சங்களை உள்ளடக்கியதாக அமையப் பெறும் பின்வரும் பிரிவுகளின் கீழ் நோக்கலாம்.

  1.  எதை நீங்கள் ஆய்வு செய்யப் போகின்றீர்கள்?
  2. அதை மேற்கொள்வதற்கான திட்டம் எங்ஙனம் அமையப் பெறுகிறது?
  3. முன்வைக்கப்பட்ட ஆய்வு முறையினை அல்லது திட்டத்தினை ஏன்       தெரிவு செய்தீர்?

நீங்கள் தெரிவு செய்த திட்டத்தினை எவ்வாறு  களத்தில் அமுல்படுத்த போகின்றீர்கள் என்ற அடிப்படையில் ஆய்வு முன்மொழிவும் அமையும். 




















ஆய்வின் பிரதான மூலக்கூறுகள்
ஆய்வின் பிரதான கூறுகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
01. ஆய்வு தலைப்பு
02. ஆய்வின் அறிமுகம் மற்றும் பின்னனி
03. ஆய்வு பிரச்சினை
04. ஆய்வின் முக்கியத்துவம்
05. ஆய்வின் நோக்கம்
06. இலக்கிய மீளாய்வு
07. ஆய்வின் கருதுகோள்
08. ஆய்வு வினாக்கள்
09. கோட்பாட்டு தளம்
10. ஆய்வு முறையியல்
11. ஆய்வு வடிவமைப்பு
12. ஆய்வு வரையறை
13. விளைவு
14. உசாத்துணை
15. கால அட்டவணை

ஆய்வின் நோக்கம் 
ஆய்வானது அறிவின் முன்னரங்க விளிம்பை மேலும் முன்னோக்கி நகர்த்தும். அறிவுத் தேட்டத்திற்கு அது மேலும் அடிப்படைப் பங்களிப்பைச் செய்யும். ஆய்வின் நோக்கங்களை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
  1. அறியாப் பொருளை அறியத் துணிதல்.
  2. மறைந்துள்ள நேர்வியங்களையும் (Facts)  உண்மைகளையும் (Truths) கண்டறிய 
  3.   முயல்தல்.
  4. பிரச்சினைகளும் தீர்வுகளும் சார்ந்த புதிய புலக்காட்சியை (Perception)  ஏற்படுத்தல்.
  5. புதிய விபரிப்புக்களை முன்மொழிதல்.
  6. தொடர்புகளையும், அல்தொடர்புகளையும் வேறு பிரித்து அறிதல்.
  7. மாறிகளுக்கிடையே (Variable)  இணங்களையும் அல் இணக்கங்களையும் காணுதல்.
  8. எண்ணக்கோள்களைப் பரீட்சித்தல்.
  9. புலமைப் பயிற்சிச் (Academic Exercise)  சுவை காணுதல்.
  10. பிரச்சினை தொடர்பான எண்ணளவு பெறுமானங்களையும் பண்பளவு பெறுமானங்களையும் கண்டறிதல். 
  11. புதிய எண்ணக்கருக்களையும் (Concepts) கோட்பாடுகளையும், விதிகளையும் நிறுவுதல், 
  12. பழையவற்றை பொய்ப்பித்தல்.
  13. அறிவுப் பரப்பில் புதிய தூண்டிகளையும், துலங்கல்களையும் முன் வைத்தல். 
  14. புதிய தீர்மானங்களைப் எடுப்பதற்கு உதவுதல்.
  15. ஆய்வுகள் வழியாக சமூகப் பயனுடமைக்கு உதவுதல்.
  16. பழைய ஆய்வுகளின் பொருண்மை நிலைகளைக் கண்டறிதல்.
  17. அறிவின் செயற்பாடுகள் தொடர்பான திறனாய்வுகளை முன்னெடுத்தல்.

பிரச்சினைகள் உருவாகும் நிலைமைகள் பின்வருமாறு பாகுபாடு செய்யப்படுகின்றன.


01. தனிநபர் அல்லது தனி நிறுவனம் அல்லது ஒரு தனி அலகு தொடர்பான உள்ளமைந்த காரணிகளாலும் வலுக்களாலும் ஏற்படும் பிரச்சினைகள்.
02. சூழல்சார் பண்புகளோடு அல்லது சூழல்சார் காரணிகளோடு எழும் பிரச்சினைகள்.
03. மாறிலிகளின் இடைவினைகளாலும், இடைத்தாக்கங்களாலும் ஏற்படும் பிரச்சினைகள்.
04. பன்முக காரணிகளின் தாக்கங்களினால் ஏற்படும் பிரச்சினைகள்.
05. கட்டமைப்புக்கள் அல்லது நிரல் அமைப்போடு தொடர்புடைய பிரச்சினைகள்.
06. மையப்படுத்தல் அல்லது பரவலாக்கலோடு தொடர்புடைய பிரச்சினைகள்.
07. வரலாற்றுக் காரணிகளோடு தொடர்புடைய பிரச்சினைகள்.
08. அரசியல், பொருளியல், அதிகாரவியல் முதலாம் பண்புகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள்.
09. உயிரியல் பண்புகளால் எழும் பிரச்சினைகள்.
10. சேதன அசேதன பண்புகளால் எழும் பிரச்சினைகள்.
11. கல்வி, பண்பாடு மற்றும் தொடர்பாடற் பண்புகளால் எழும் பிரச்சினைகள்.
12. உற்பத்தி முறைமை மற்றும் இயக்க முறைமைகளோடு இணைந்த பிரச்சினைகள்.
13. அறிவாதாரங்களோடு இணைந்த பிரச்சினைகள்.
14. இலக்குகள், நோக்கங்கள் மற்றும் முகாமைத்துவத்தோடு தொடர்புடைய பிரச்சினைகள்.


    இவ்வாறு பிரச்சினைகள் பல்வேறு பாகுபடுத்தல்களுக்கு உள்ளாக்கப் படுகின்றன. ஆய்வுப் பிரச்சினையைத் தெரிவு செய்யும் பொழுது மிகவும் அற்பமான அல்லது மிகவும் எளிதான ஒரு பிரச்சினையைத் தெரிவு செய்தல் உயர்மட்ட ஆய்வுகளிலே தவிர்த்து விடப்படுகின்றன. அவ்வாறு அதிக அளவு ஆழ்ந்து பரந்த ஆய்வுகள் செய்யப்பட்ட பிரச்சினைகளும் பொதுவாக தவிர்த்து விடப்படுகின்றன.


          ஆய்வுப் பிரச்சினை ஒன்றை தெரிவு செய்தல் என்பது முன்னறிதற் கற்கை (PRELIMINARY STUDY)யுடன் தொடர்புடையது. பிரச்சினைகளை கண்டறிவததற்கான கற்கை ஆய்வுக்கு அடிநிலையாகின்றது. பிரச்சினைகளைக் கண்டறிந்தும் அவற்றின் பரப்பளவை, அவற்றின் எல்லைகளை அதன் செயல்நிலைகளை இனம்காணுதல் அதனோடு இணைந்த ஆய்வுகளை, தகவல்களையும் உசாவுதல் ஆய்வறிவாளருடன் கலந்துரையாடுதல் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுக்குரிய பிரச்சினைத் தலைப்பை மொழிவடிவாக்குதல் வேண்டும்.

    பிரச்சினையை மொழிவடிவாக்கும் போது மொழிக் கட்டுமானம் வழுவற்ற மொழி வழங்கல் பொருத்தமான கலைச்சொற்பிரயோகம் தௌ;ளத் தெளிந்த மொழி முதலியவற்றிலே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நொதுமலான சொற் பிரயோகங்கள் தவிர்க்கப்படுவது சாலச்சிறந்தது. ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் போன்று பொதுவாகப் பிரச்சினைகளும் அவற்றுக்குரிய கோட்பாட்டு வடிவம் என்ற அறிமுறையை ஒரு பரிமாணமாகவும் அதன் செயல் வடிவத்தை மறுபரிமாணமாகவும் வரையறுத்தலுக்குத் துணையாக அமையும்

ஆய்வு வடிவமைப்பு
ஆய்வுப் பிரச்சினையை இனம் கண்டதும் ஆய்வு வடிவமைப்பு (RESEARCH DESIGN) பற்றி அடுத்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஆய்வுப் பிரச்சினையை வடிவமைக்கும் பொழுது ஆய்வாளர்கள் சில அடிப்படை வினாக்களை எழுப்புதல் வேண்டும். அவை வருமாறு.
01. ஆய்வு எந்த உள்ளடக்கத்தை இறுகப்பற்றுகிறது?
02. இந்த ஆய்வின் இலக்குகள் யாவை?
03. ஆய்வு ஏன் மேற்கொள்ளப்படுகின்றது?
04. எங்கு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது?
05. எந்த ஆய்வு முறை அல்லது ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட 
     இருக்கின்றன?
06. பொருத்தமான தகவல்களையும் தரவுகளையும் எங்கு பெற்றுக் 
    கொள்ளலாம்?
07. ஆய்வுக்குரிய கால அளவு என்ன?
08. ஆய்வுக்குரிய செலவுகள் என்ன?

09.எத்தகைய உபாயங்களை கையாண்டு தகவல்களையும், தரவுகளையும் 

     பெறுதல்?
10. தகவல்களையும், தரவுகளையும் எவ்வாறு பகுப்பாய்வு செய்யலாம்?
11. ஆய்வறிக்கையை எவ்வாறு தயாரிக்கலாம்?


      ஆய்வு வடிவமைப்பானது பிரச்சினை பற்றிய தெளிவான விளம்பல், ஆய்வு நோக்கங்கள், பயன்கள், தேவைகள், தகவல்கள், திரட்டல் தொடர்பான ஆதாரங்கள், நுண் முறைகள், வழிமுறைகள், எத்தகைய ஆய்வு முறை அல்லது ஆய்வுமுறைகள் கையாளப்படவிருக்கின்றன என்பவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

     ஆய்வு வடிவமைக்கும் பொழுது ஆய்வு சார்ந்த அளவுப் பெறுமானங்கள் பற்றியும் பண்புப் பெறுமானங்கள் பற்றியும் தெளிவு கொள்ளல் வேண்டும். பண்பளவு பெறுமானங்களை எண்ணளவு பெறுமானங்களுக்கு கொண்டுவர முடியுமா என்பது பற்றியும் சிந்தித்தல் வேண்டும். மறுபுறம் எண்ணளவு பெறுமானத் தொகுப்பிலிருந்து பண்புசார் நிலைமைகளின் செறிவுகளைக் கண்டறிய முடியுமா என்பது பற்றியும் சிந்தித்தல் வேண்டும்.
எத்தகைய கருதுகோள் ; (HYPOTHESIS) அல்லது கருதுகோள்கள் ஆக்கப்படல் வேண்டும், பரீட்சிக்கப்படல் வேண்டும் என்ற திட்டமிடலையும் ஆய்வு வடிவமைப்பானது தேவைக்கேற்றவாறு கொண்டிருத்தல் வேண்டும். ஆய்வுமுறைகளின் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு ஆய்வுக் கட்டமைப்பும் வேறுபடும். உதாரணமாக பரிசோதனை ஆய்வுமுறைக்கும் விவரண ஆய்வுமுறைக்குமிடையே ஆய்வுக் கட்டமைப்பு வேறுபட்டுக் காணப்படும். 

ஆய்வின் அடிப்படை நெறிகள்
01. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் அல்லது பிரச்சினை  
அல்லது எண்ணக்கரு பற்றிய தெளிவு
02. ஆய்வாளருக்கு அந்த ஆய்வுப் பொருள் பற்றிய அறிவு முன்னனுபவம் பற்றிய மதிப்பீடு அவசியமாகின்றது.
03. நன்கு தெரிந்த விடயங்கள் யாவை, தெரியாத விடயங்கள் யாவை, ஓரளவு தெரிந்தவை யாவை, ஊகித்து அறிந்தவை யாவை, என்பவை பற்றிய தெளிவு.
04. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் பற்றி இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள், அவற்றின் முடிவுகள் முதலியவற்றை தொகுத்துக் கொள்ளல்.
05. குறித்த ஆய்வுக்குரிய வள ஆளணியினர், வள நிலையங்கள், வளப் பொருட்கள் பற்றிய விபரங்களை திரட்டிக் கொள்ளல் - இதற்கு இன்ரனெற் எனப்படும் தொடர்புப் பின்னலின் உதவியைப் பெறலாம்.
06. மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த ஆய்வுப் பொருள் பற்றிய அறிவின் இயல்பு நிலை(STATE OF KNOWLEDGE) பற்றி தெரிந்து கொள்ளல்.
07. ஆய்வின் செல்நெறியைத் தீர்மாணித்தல்.
08. போதுமான அளவுக்குத் தகவல் திரட்டுதல்.
09. பொருத்தமான முறையியலைப் பயன்படுத்தி ஆய்வு முன்னெடுத்தல்.
10. ஆய்வின் வழியாக மெய்மைக்கு ஒளிப்பாய்ச்சுதல்.
11. தான் எதிர்பாராத முடிவுகள் ஆய்வுகளிலே வெளிவந்தாலும் மனம் கோணாது ஏற்றுக் கொள்ளல்.


முறையியலும் நுட்பவியலும்
     முறையியல் என்பது ஆய்வின் செயற்றொகுதியை (SYSTEM ஓட்டு மொத்தமாகக் குறிப்பிடும். ஆனால் நுட்பவியல் என்பது “செல்நடை” (PROCEDURE யைக் குறிப்பிடும். முறையியலுக்கு எடுத்துகாட்டுகளாக ஒப்பியல் முறையியல், தொழிற்ப்பாட்டு முறையியல், தனியாள் ஆய்வு முறையியல், புள்ளிவிபரவியல் முறையியல், பரிசோதனை முறையியல், விதிவருவித்தல் முறையியல், விதிவிளக்க முறையியல், கருத்தியல் முறையியல், வினாக்கொத்து முறையியல், பகுப்பாய்வு முறையியல், நேர்காணல் முறையியல், உட்கருத்து (VERSTEHEN முறையியல், பொதுசனக் கருத்து முறையியல், ஆவண முறையியல், நூலக முறையியல், களக்கற்றை முறையியல் என்றவாறு முறையியல் பலவகைப்படும். மேற்கூறிய முறையியல்களோடு இணைந்த ஆய்வுக் கருவினைப் பயன்படுத்தும் ஒழுங்கு முறையானது நுட்பவியல் எனப்படும். உதாரணமாக புள்ளி விபரவியலில் பொருத்தமான தேர்வுகளைப் பயன்படுத்தித் தரவுகளையும், ஈட்டுப் புள்ளிகளையும் பெறுதல் நுட்பவியல் என்று கூறப்படும்.

    ஆய்வாளர் ஒருங்கமைத்த தரவுகளைத் திரட்டல், ஒழுங்கமைந்த உற்று நோக்கல், ஒழுங்கமைந்த வகைப்படுத்தல், ஒழுங்கமைந்த வியாக்கியானம் என்றவாறு ஒழுங்கமைவியம் விளக்கப்படுகின்றது. நேர்விடயங்களை (FACTS) திரட்டுதல், தொகுத்தல் உண்மையைக் கண்டறிவதற்கான சரியான அமைப்பாக்கங்களை மேற்கொள்ளுதல் முதலியவற்றிலே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

ஆய்வுப் பிரச்சினைகள்
ஆய்வுக்குரிய பிரச்சினைகள் பின்வருமாறு பாகுபடுத்தப்படும்

01. ஆய்வாளரின் முற்கோடல், அகவயப் பாங்கு, ஆளுமை சார்ந்த பிரச்சினைகள்.
02. அறிவியம் (INFORMATION அல்லது தகவல்களை பெறுவதிலுள்ள இடர்களும், பிரச்சினைகளும்.
03. ஆய்வுக்கெனப் பயன்படுத்தப்படும் அணுகுமுறைகள் முறையியல்கள் சார்ந்த பிரச்சினைகள்.
04. புற அழுத்தங்கள் சார்ந்த பிரச்சினைகள் உதாரணமாக நிதி வழங்குவோர், மேலாண்மை செலுத்துவோர் முதலியோரின் வேட்கைகள் ஆய்வின் மீது செல்வாக்கு செலுத்துதல் பற்றிய கருத்துக்களும் அண்மைக் காலத்தில் முன்வைக்ப்பட்டுள்ளன.
05. ஆய்வின் செயற்பாட்டினிடையே இடம்பெறும் குறுக்கீடுகள், மறைவான தாக்கங்களும் ஆய்வுக்குரிய பிரச்சினைகளாகின்றன.
06.ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவரின் ஒத்துழைப்பு, துலங்கல் தருபவர்களின் ஒத்துழைப்பும், நம்பகமான இசைவுதல் பெறுதலும் தொடர்பான பிரச்சினைகளும் குறித்து உரைக்கப்பட வேண்டியுள்ளன. 


கருதுகோள் (HYTOTHESIS ஆக்கம்
   நேர்வியங்களை (FACTS அல்லது தோற்றப்பாடுகளை அறிவியல் அடிப்படையில் விளக்குவதற்குரிய முன்னேற்பாடாக கருதுகோள் விளங்குகின்றது. கருதுகோள் முற்கோள் என்றும் குறிப்பிடப்படும். ஓர் உண்மைக் கட்டமைப்பை நிறுவுவதற்கு அல்லது நிராகரிப்பதற்கு உதவும் ஓர் முன்னேற்பாடான படிநிலையாக கருதுகோள் அமையும். கருதுகோள் சரியானதாக இருக்குமென்று உறுதியாக கூறமுடியாது. ஆய்வின் நம்பிக்கைக்குரிய சான்றாதாலரங்களைப் பெற்ற பின்னரே கருதுகோள் சரியானதா அல்லது தவறானதா என்ற முடிவுக்கு வரமுடியும்.

   பிரச்சினையை நன்கு விளங்கிக் கொண்ட பின்னரே கருதுகோளை முன்மொழிய முடியும். உற்று நோக்கலே கருதுகோளாக்கத்தின் முதற்படி, உற்றுநோக்கலை ஒழுங்கமைத்தல் இரண்டாவது படியாக அமையும்.
உற்று நோக்கலும் ஒழுங்கமைத்தலும் சமாந்தரமாகவும் நிகழலாம். அதனோடு தொடர்புடைய தகவல்களையும் பெறுதல் அடுத்து முக்கியத்துவம் பெறுகின்றது.பிரச்சினையின் இயல்புகளையும் அதிலே தாக்கம் விளைவிக்கும் கூறுகளையும் இனம்காணுதல் அடுத்ததாக சிறப்பிடம் பெறுகின்றது. இவை அணைத்தையும் திரட்டி ஓர் முழுமையான புலக்காட்சியை பெற்றபின்னரே கருதுகோள் பற்றிய உறுதியை எட்டமுடியும்.

கருதுகோள் பல வகையாக பாகுபடுத்தப்படும். அவை

01) விபரிப்புக்களை அடிப்படையாகக் கொண்ட கருதுகோள். இது விபரிப்பு கருதுகோள் (DESCRIPTIVE HYPOTHESIS எனப்படும்.
02) தரவுகளால் உறுதிப்படுத்தப்படாது தற்காலிகமாக மேற்கொள்ளப்படும் கருதுகோள் இது. தற்காலிக கருதுகோள் அல்லது அல்நிலைக் கருதுகோள் (TENTATIVE HYPOTHESIS எனப்படும்.
03) இயல்புகளை பிரநிதித்துவப்படுத்தும் கருதுகோள் இது. பிரதிநிதித்துவக் கருதுகோள் அல்லது நிலைதெரி கருதுகோள் (PREPRESENTATIVE HYPOTHESIS) எனப்படும்.
04) கல்விப் புலத்தில் ஏற்கனவே உருவாக்கப்பட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் ஆய்வுகளை முன்னெடுக்க உருவாக்கப்படும் கருதுகோள்: இது மாதிரி கைநிலைக் கருதுகோள் அல்லது காட்டுருவக் கருதுகோள் (MODEL BASED HYPOTHESIS எனப்படும். இதனை விபரிப்புக் கருதுகோளுல் அடக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

     நல்ல கருதுகோள் என்பது தெளிவானதாயும் திட்டவட்டமானதாயும் அக ஒருங்கிணையம் (SELF CONSISTENT) கொண்டதாகவும் பரீட்சிக்கப்ப்டடதாகவும் அமையும். ஆய்வின் வழியாக நிராகரிக்கப்படும் கருதுகோள்கள் வறிதாகிய கருதுகோள்கள் எனப்படும். வழியாக நிராகரிக்கப்படும் கருதுகோள்கள் வறிதாகிய கருதுகோள்கள் எனப்படும். ஆய்வைப் புறவயமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் முன்னெடுப்பதற்கு கருதுகோள் துணைசெய்யும். ஆய்விலே தெளிவை ஏற்படுத்த அது உதவும். ஆய்வை நெறிப்படுத்தும் கருவியாக அது அமையும். ஆய்வுச் சிந்தனையை வளப்படுத்தவும் கருதுகோளாக்கம் கைகொடுக்கும்.

  கருதுகோளாக்கம் ஒரு தற்காலிக செயல்முறை. அது ஒரு தற்காலிக எதிர்பார்ப்பு. ஆய்வின் வழியாக கருதுகோள் நிறுவப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். ஆய்வின் வழியாக நிருபணமாக வேண்டியவற்றை கருதுகோள் புலப்படுத்தி நிற்கும். ஆய்விலே பரீட்சிக்கப்பட வேண்டிய ஏற்பாட்டினை கருதுகோள் கொண்டிருக்கும் ஆய்வின் செல்நெறிகள் சிதறிவிடாமல் இருப்பதற்கு கருதுகோள் துணைசெய்யும்.

    ஆய்வாளர்களின் புலமைப் பயிற்சியை நெறிப்படுத்தி திட்டவட்டமான இலக்குகளை நோக்கி நகர்வதற்கு கருதுகோள் வலிமையான கருவியாகும். ஆய்வுக்குரிய கட்டமைப்பை எளிதாக்கவும் வலிதாக்கவும் இது துணைசெய்யும். ஆய்விற்குரிய ஊக்கலை வழங்கும் கருதுகோள் ஆய்வை ஆற்றுப்படுத்தும் திசைகாட்டியாகவும் அமையும். கருதுகோள் ஒரு கருவியாகுமேயன்றி முடிவுப் பொருளாகாது.

   எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டும். அனுமானித்தலை அடிப்படையாகக் கொண்டும் கருதுகோளாக்கம் மேற்கொள்ளப்படும். வளமான பின்னணி அறிவு கருதுகோளாக்கத்திற்குத் துணைசெய்யும். விதிவருவித்தற் செயல்முறையும் ஆக்கத்திறனும் கருதுகோளாக்கத்திற்கு அவசியமாகும்.

   கருதுகோள் தெளிவானதாயும் பரீட்சிக்கப்படத்தக்கதாயும் அமைக்கப்படல் வேண்டும். மாறிகளுக்கிடையேயுள்ள தொடர்புகளைக் கருதுகோள் வெளிப்படுத்தி நிற்கும். திட்டவட்டமான வரையறையுடையதாக கருதுகோள் கட்டுமானம் செய்யப்படல் வேண்டும். தெரிந்தறியப்பட்ட தகவல்களுடன் அது இசைவுற்று நிற்றல் அவசியமானது. குறிப்பிட்ட கால அளவுக்குள் பரிட்சிக்கப்பட்டத்தக்க இயல்பினதாக அமைக்கப்படல் வேண்டும். பின்வருவன கருதுகோள்களின் வகைப்பாடுகளாகும்.
01. வினாவடிவில் அமையும் கருதுகோள்
02. பிரகடனப் பாங்குடைய கருதுகோள்
03. நெறிப்பாடுடைய கருதுகோள்.
04. சூனியக் கருதுகோள்.
05. நேர்நிலைக் கருதுகோள்.
06. எதிர்நிலைக் கருதுகோள்.
  கருதுகோள் ஆக்கத்திலே மாறிகளும் செயற்பாட்டு வரைவிலக்கணங்களும் முக்கியத்துவம் பெறும். சுயாதீனமாறி, சார்ந்தமாறி (ஆண், பெண்), கட்டுப்படுத்தியமாறி (உ-ம் வயது), குறுக்கீடு செய்யும் மாறி (உ-ம் கற்றல்) என்றவாறு மாறிகள் வகைப்பாடு செய்யப்படும். மாறிகளைத் தெரிந்தெடுப்பதற்குக் கோட்பாட்டைக் கருத்திற் கொள்ளல், வடிவமைப்பை கருத்திற் கொள்ளல், நடைமுறைகளை கருத்திற் கொள்ளல் என்பவை தவிர்க்கப்பட முடியாதவை. கிடைக்கப்பெற்ற தகவல்களையும், தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தருக்க நிலையாகவோ, புள்ளிவிபர நிலையிலோ, பரிசோதனைகளின் அடிப்படையாகவோ கருதுகோள்களைப் பரிசீலிக்கலாம். 
                                                                                   தொடர்ச்சி பகுதி - 02




Post a Comment

0 Comments