கல்விச் செய்முறையினுள் பயிற்சி


 கல்விச் செய்முறையினுள் பயிற்சியினை உள்ளடக்குதல் கட்டயாமானதாகும். வகுப்பறையின் அமைப்பு எதிர்கால தேவை என்பவற்றினை கருத்திற் கொண்டு பயிற்சியின் தேவை உணரப்படுகிறது.  மற்றும் கீழ்வரும் சந்தர்ப்பங்களின் போதும் பயிற்சியின் தேவை உணரப்படுவதை அவதானிக்கலாம். 


 மாணவர்கள் பூரண அறிவினைப் பெறுவதற்கு: வகுப்பறையில் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக கற்பிக்கும் வேளையில் அது தொடர்பான ஒரு சிறந்த விளக்கத்தை பெற வேண்டுமாயின் மாணவர்களுக்கு அது தொடர்பான அதிகமான பயிற்சிகளை வழங்கும் போது அவர்கள்  குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அறிவினைப் பெறக்கூடியதாக இருக்கின்றது. எடுத்துகாட்டாக மாணவர்களுக்கு கூட்டல் கணக்கினை கற்பிக்கும் போது கூட்டல் தொடர்பான பயிற்சிகளை வழங்கும்போது குறிப்பிட்ட மாணவனுக்கு கூட்டல் தொடர்பான விளக்கத்தை பெறுவர்.

     மாணவர்களின் அடைவு மட்டத்தை பரிசீலிப்பதற்கு: பல்வகைப்பட்ட மாணவர்கள் வகுப்பறையில் காணப்படுவர். இதன் போது ஆசிரியர் கற்பிக்கும் ஓர் விடயம் எல்லா மாணவர்களுக்கும் ஒரே விதமாகத்தான் புரியும் என்பது சந்தேகமே. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் கற்பித்தலின் போது தான் கற்பித்த விடயம் தொடர்பாக பயிற்சிகளை வழங்கி அதனூடாக மாணவர்கள் எவ்வாறு குறிப்பிட்ட பாடத்தை புரிந்துக்கொண்டுள்ளார்கள் அவர்களின் அடைவு மட்டம் என்ன? தான் கற்பித்தது இம்மாணவர்களுக்கு சரியான முறையில் போய் சேர்ந்துள்ளதா? என்பதை அறிந்து அதற்கு ஏற்றாட்போல் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சி அவசியமாகும். 

     வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயன்முறையின் வினைத்திறன் விளைத்திறன் தன்மைகளை இனங்கண்டு கொள்வதற்கு. வகுப்பறையில் கற்பித்தல் நிகழும் போது ஆசிரியரின் எதிர்பார்ப்பு தனக்கு கிடைத்த வளங்களின் ஊடாக சிறந்த  கற்பித்தலை மேற்கொள்ளவும் அக்கற்பித்தலின் ஊடாக மாணவர்களின் மத்தியில் சிறந்த பெறுபெறுகளை பெறுவதுமாகும். இதனை நாம் கற்பித்தலை வினைத்திறன் என்றும் மாணவர்களின் சிற்நத பெறுபேறுகளை விளைத்திறன் எனவும் கூறலாம். ஒரு பயிற்சியினை வழங்கி மாணவர்கள் மத்தியிலிருந்து அப்பயிற்சியில் போதுமான அளவு விடைகள் திருப்திகரமாக கிடைக்கபெறாவிடின் அடுத்த கட்டமாக ஆசிரியர் தன்னுடைய கற்பித்தல் நுட்பங்களை எவ்வாறு சிறந்த முறையில் வினைத்திறன் முறையில் பயன்படுத்துவது என்று சிந்திக்க முற்படுவர். எடுத்துகாட்டாக ஐந்து குழுக்கள் இருக்கும் ஒரு வகுப்பறையில்  வழங்கப்பட்ட பயிற்சிகளின் போது இரண்டு அல்லது  மூன்று குழுக்கள் சரியான முறையில் தொடர்ச்சியாக பயிற்சிகளின் போது திருப்திகரமான விடைகள் இல்லையெனின் குழுக்களை மீண்டும் புதிய குழுக்களாக பிரித்து கற்பிக்க முற்படுவர். ஆகவே இந்த இடத்தில் பயிற்சியின் தேவை அவசியமாகிறது.மேலும் மாணவர்களின் பெறுபேறுகளின் வீழ்ச்சி இருக்குமாயின் அதனையும் நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடியதாக இருக்கும். இதன் போது சிறந்த பெறுபேறுகள் அல்லது சிறந்த விளைத்திறனை வகுப்பறையில் காணலாம். இவ்வாறாக கற்பித்தல் செயன்முறையில் பயிற்சியின் தேவை இன்றிமையாததாக இருக்கின்றது

 மேலும் தேர்ச்சி மட்டத்தை அடையச்செய்வதற்கு பயிற்சி தேவைப்படுகிறது: வகுப்பறையில் ஒவ்வொரு பாடவேளையிலும் ஒவ்வொரு தேர்ச்சி மட்டத்தை அடையச் செய்வது ஆசிரியரின் கடமையாகும். இதனை நடைமுறைப்படுத்துவதற்காக பல்வேறு உத்தி முறைகளை வகுப்பறையில் கையாளப்படுவதை நாம் காணலாம். இவ்வாறான நிலைமைகளில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட தேர்ச்சி மட்டம் சென்றடைந்துள்ளதா என்பதை கண்டறிய பயிற்சி தேவைப்படுகிறது. அத்துடன் பாடவேளையில் குறிப்பிட்ட தேர்ச்சியை மீத்திறன் மாணவன் மிக விரைவாகவும் மெல்லக்கற்கும் மாணவன் தாமதித்தும் விளங்கிகொள்வதையும் அவதானிக்கலாம். இதன் போது மீத்திறன் மாணவன் மிக விரைவாக செயற்பாடுகளை செய்து முடித்ததும் அவனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் அவனுடைய திறமைகளை வளர்த்தெடுக்கவும் மேலதிக பயிற்சி தேவைப்படுகிறது.  

   அத்துடன் ஆசிரியரின் ஆளுமைத் தன்மைகளை விருத்தி செய்வதற்கு: அதாவது ஆசிரியரின் கற்பித்தலின் பின் மாணவர்களின் நிலைமைகளையும் அத்துடன் ஆசிரியரின் கற்பித்தல் வெற்றித்தனை;மைகளையும் பயிற்சிகள் வழங்குவதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். அதாவது ஆசிரியரின் கற்பித்தல் பாங்கு மாணவர்களுக்கு பொருத்தமானதாக உள்ளதா? அல்லது மேலும் விருத்தி செய்தல் வேண்டுமா? போன்ற விடயங்களினூடாக ஆசிரியரின் ஆளுமைத் தன்மைகளை அறிந்துக்கொள்வதுடன் அதற்கு ஏற்றாட்போல் எதிர்கால நடவடிக்கைகளையும் திட்டமிடுவதற்கு பயிற்சிகள் தேவைப்படுகிறது.

  மற்றும் மாணவர்களை போட்டி பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தல்: ஒவ்வொரு நாட்டிலும் மாணவர்களுக்கென்று பல்வேறு அறிவுசார் போட்டிகள் நடாத்தப்படுகின்றது. இந்த போட்டிகளுக்கு சிறந்த முறையில் மாணவர்களை தயார்படுத்தவும் அவர்களுக்கு வெற்றிகளை ஈட்டச் செய்வதற்கும் அதிகமான பயிற்சிகள் தேவைப்படுகிறது. அதிகமான பயிற்சிகள் வழங்கும் போது குறிப்பிட்ட மாணவர்களின் ஞாபகத்திறன் விருத்தியடைவதன் மூலம் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளை பெறக்கூடியதாக இருக்கும்.

  மேலும் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்ச்சியை அடையச் செய்வதற்கு பயிற்சிகள் அவசியமாகின்றது. குறிப்பிட்ட பாடப்பகுதிகளை மாணவர்களை அடையச் செய்வதற்கும் அது தொடர்பான சிறந்த விருத்தியை ஏற்படுத்தவும் பயிற்ச்சிகள் முக்கியம் பெறுகின்றன

  வகுப்பறையை உயிரோட்டமாக கொண்டு செல்வதற்கும் மாணவர்களுக்கு பாடம் தொடர்பான விருப்பத்தினை ஏற்படுத்தவும் பயிற்சி தேவைப்படுகிறது: அதாவது வகுப்பறையில் ஆசிரியர் மாத்திரமே செயற்படும் வேளையில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடம் தொடர்பான ஆர்வம் குறைவடையும். இதனை தவிர்க்கும் முகமாக மாணவர்களை செயற்பாட்டு ரீதியில் பாடத்தை கொண்டு செல்லுதல் கட்டாயமாகும். இதன் போது வித்தியாசமான முறையில் பயிற்சிகளை வழங்கும் போது இலகுவாக மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடம் விளங்கக்கூடியதாக இருப்பதுடன் மாணவர்களும் குறிப்பிட்ட பாடத்தின மேல் ஈடுபாடுடன் செயற்படுவதை காணலாம். 


  மேலும் மாணவர்களின் இயலுமை இயலாமைகளை கண்டறிவதற்கு: பயிற்சிகள் வழங்கப்படும் போதே மாணவர்களிடையே எவ்வாறான விடயங்களில் திறமை மிக்கவர்களாக இருக்கின்றார்கள் எந்தப்பகுதியில் அவர்கள் இடர்படுகின்றார்கள் என்பதை கண்டறியலாம். அத்துடன் அவர்கள் இடர்படுகின்ற விடயங்களை நிவர்த்தி செய்வதற்கும் பயிற்சிகள் உதவியாக இருக்கும். உதாரணமாக குறிப்பிட்ட மாணவன் எழுதுவதில் இடர்படுகின்றார் எனின் அதனை கண்டறியவும் அதனை நிவர்த்தி  செய்யவும் முடியும்.

  மற்றும் மாணவர்களின் ஆக்கத்திறன் விடயங்களை விருத்தி செய்வதற்கும் பயிற்சிகள் தேவைப்படுகிறது. அதாவது மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் போது அதனூடாக  அவர்களின் ஆக்கத்திறனை கண்டறியலாம். குறிப்பிட்ட மாணவன் கவிதை எழுதுவதில் திறமைமிக்கவனாக இருப்பானாயின் அப்பிரிவில் சிறப்புத்தேர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும்.

 அத்துடன் மாணவரின் அறிவைத் தூண்டுவதற்கு: இதன்போது வகுப்பறையில் வித்தியாசமானதும் கடினமானதுமான வினாக்களுடன் கூடிய பயிற்சிகளை வழங்கும்போது மாணவன் வித்தியாசமான முறையில் சிந்திக்க முற்படுகின்றான். இதன்போது அவனுடைய அறிவுத் தூண்டப்படுகிறது. இதன் காரணமான மாணவனின் நுண்ணறிவு விருத்தியும் இடம்பெறுகிறது. மேற்கூறப்பட்ட விடயங்களின் மூலம்   கற்றல் கற்பித்தலின் போது பயிற்சியின் தேவையை அறியலாம். 

ஆக்கம் 
R..திஸ்ணாராஜா 
BA,PGDE, DIP in Tamil,



Post a Comment

0 Comments