ஒரு பிள்ளையின் உடல் விருத்தி அறிவு விருத்தி மனவெழுச்சி விருத்தி சமுதாய விருத்தி நல்லொழுக்கப் பண்புகள் ஆகிய சகல அம்சங்களிலும் ஏற்படும் திருப்திகரமான விருத்தி பூரண விருத்தி எனக்கூறலாம்.
பிள்ளைகள் ஒரு கட்டத்தின் பின் ஆசிரியர்கள் கையில் ஒப்படைக்கப்படுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் பிள்ளைகளின் பூரண விருத்தியில் ஆசிரியர்களின் வகிபங்கு இன்றியமையாததாக அமைகிறது. இந்தச்சந்தர்ப்பில் பிள்ளைப்பருவம் கட்டிளமைப்பருவம் என்ற அடிப்படையில் ஆசிரியரின் வகிப்பங்கை நாம் நோக்கலாம். ஒருவன் நல்லவனாவதும் கெட்டவதாவும் பெற்றோர் கைகளில் மட்டுமல்ல ஆசிரியரின் கைகளிலும் தங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு பிள்ளையின் அனைத்து அம்சங்களையும் அறிந்து அதனிலும் நல்லதை தெரிவு செய்து அதனை நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியரிடமே காணப்படுகிறது.
பிள்ளைப்பருவம்
இப்பருவமானது 6 வயது தொடக்கம் 12 வயது வரை உள்ளவர்களைக் குறிக்கும். இந்தப்பருவத்திலே தான் முக்கிய விருத்திப்படிகள் நிகழ்கின்றன. உலகம் பற்றிய எண்ணக்கருவானது பாரியளவில் விருத்தியடைகின்றது. தம்மை சூழவுள்ள ஒத்த வயதினருடனும் வயது வந்தவர்களுடனும் உறவாடக் கற்றுக் கொள்கின்றனர். இப்பருவத்தில் ஆசிரியர்களின் தாக்கமானது பெருமளவில் பிள்ளைகளின் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும். ஆகவே தான் ஆசிரியர்கள் மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பொருத்தமான செயற்பாடுகளை வடிவமைத்தல் பிள்ளைகளின் இயலுமை இயலாமைகளை கண்டு நிவர்த்தி செய்தல். மற்றும் உடல் அறிவு மனவெழுச்சி போன்ற விடயங்களில் அக்கரைக்கொண்டு ஆரம்பத்திலையே அதற்கான பரிகார விடயங்களில் ஈடுபடுதல். போன்ற பல விடயங்களை மேற்கொள்ளும் போது எதிர்காலத்தில் குறிப்பிட்ட பிள்ளைகள் பூரண விருத்தியை நோக்கி செல்வதை காணலாம்.
கட்டிளமைப் பருவம்
இப்பருவத்தினர்கள் பதின் மூன்று வயது தொடக்கம் பத்தொன்பது வயதிற்குட்பட்ட நிலையினரைக் குறித்தாலும் இருபது வயதிற்கு மேலும் நீடிக்கின்ற சுமார் 23 வயது வரையான காலப்பகுதியையும் உள்ளடக்கும் கட்டிளமைப் பருவத்தினரும் உளர். படிப்படியாக குடும்பத்திலிருந்து விலகுதலும், சுதந்திரமடைதலும், தம் வயதொத்தவர்களுடன் சேர்ந்து உறவுகளை வளர்த்துக் கொள்வதும், செயலாற்றும் திறன்களை விருத்தி செய்தலும் இடம்பெறும். தனித்துவம், சுய அடையாளம் உருவாவதும் இந்தக் காலப்பகுதியிலேயேயாகும். இப்பருவத்தினர்கள் பக்குவமற்றவர்கள்¸ அச்சமும் பயமும் சந்தேகமும் கொண்டவர்கள். ஏற்கனவே பெற்றோர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வாழப்பழகிய இவர்கள் இப்பருவத்தில் கட்டுப்பாடுகளை விரும்பாமல் தங்களது தேவைகளை தாங்களே நிறைவுசெய்ய முனைவர். தனிமையை நாடுவதும் எடுத்ததற்கெல்லாம் கோபமடைவதும் தனது சுய கௌரவத்தின மீது அதீத அக்கரை கொள்கின்றவர்களாகவும் இருப்பர். தமது செயற்பாடுகளில் வெளித் தலையீடுகளை பெரும்பாலும் விரும்பமாட்டார்கள். இவ்வேளையில் ஆசிரியர் ஒரு சகோதரனாக தோழனாக வழிகாட்டுபவராக போன்ற பல்வேறு வகிபாகங்களை ஆசிரியர் ஏற்றுத் தகுந்த அறிவுறைகளை வழங்கி அவர்களின் உண்மை நிலையை புரியவைத்து அவர்களின் திறமைகளை எடுத்துக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்துதல் வேண்டும். அத்துடன் இவ்வயது மாணாக்கள் அறிவுரை விரும்ப தகாதவர்களாகவே திகழ்வர். இதனால் பெரியவர்களின் பொன்னான கருத்துக்கள் கூட சில சமயங்களில் கசக்கும் தன்மையாகவே மாணவர்களுக்கு தென்படும். இவ்வாறான நிலைமைகளில் மாணவர்கள் பல்வேறு விடயங்களில் மீது தனது ஆர்வத்தை காட்டுவர் எடுத்துக்காட்டாக விளையாட்டு இசை நாடகம் ஒன்றுக்கூடல் போன்றவற்றை கூறலாம். இவர்களுக்கு அறிவுரை வழங்கும்போது விளையாட்டின் ஊடாக இசையினூடாக கவிதையினூடாக நாடகத்தினூடாக அதனை தெளிவுப்படுத்தும் போது அவர்களும் திசைமாறி செல்லாமல் ஒரு சிறந்த பூரண விருத்தியை நோக்கி செல்லக் கூடியவர்களாக திகழ்வர்.
ஆக்கம்
R..திஸ்ணாராஜா
BA,PGDE, DIP in TAmil,
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்