பிள்ளையின் விருத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்


பிள்ளையின் விருத்தியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்



ஒரு பிள்ளையின் விருத்தியில் பல்வேறுப்பட்ட காரணிகள் செல்வாக்கு  செலுத்துவதைக் காணலாம். அந்தவகையில் கீழ்வரும் உதாரணங்களில் அடிப்படையில் நாம் இதனை மெய்ப்பிக்கலாம்.

§                 பிறப்பிற்கு முன்னுள்ள சூழல்

   ஒரு பிள்ளையின் விருத்தி சூழலானது¸ தாயின் வயிற்றில் கருவுற்ற நிலையிலையே ஆரம்பிக்கின்றது. இச்சூழல் எவ்வாறு அமைகின்றதோ அவ்வாறே பிள்ளையின் பிறப்பிலும் வளரச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு சுகதேகியான தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தை சுகதேகியாகவும் கயரோகம் போன்ற நோயிகளினால் பீடிக்கப்பட்ட குழந்தைகள் பாதகமான விளைவுகளுடன் கூடியதாக பிறப்பதையும் அவதானிக்கலாம். அத்துடன் பொருளாதார கஷ்டங்களுடன் வாழும் ஒரு தாய்க்கு¸ போஷாக்குள்ள உணவுகளை உட்கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்காமையினால் அந்தக்குழந்தை பிறக்கும் போது மந்தப்போசனையினால் பீடிக்கப்பட்டு இருப்பதையும் காணலாம். இதனால் பிள்ளையின் விருத்தியில் கருவுற்ற சூழல் நிலைமைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை அவதானிக்க கூடியதாக இருப்பதுடன் கருவுற்ற சூழல் சிறப்பாக இருக்குமிடத்து அக்குழந்தை பிறந்தது முதல் எதிர்கால பிள்ளையின் விருத்தி மட்டங்கள் வரை சாதகமான நிலைமைகள் நோக்கி செல்வதை அவதானிக்கலாம். ஒரு தாய் தான் கருவுற்ற நிலையில் எவ்வாறான அணுகுமுறைகளை கைக்கொள்கின்றாளோ அதன் அடிப்படையிலையே பிள்ளையின் விருத்தியை காணலாம்.

§           குடும்பச்சூழல்

  பிள்ளை விருத்தியில் குடும்பச் சூழல் பிரதான வகிப்பங்கை ஆற்றுகின்றது. ஒரு பிள்ளையின் குடும்ப நிலைமைகளை கொண்டே அப்பிள்ளையின் நடத்தை மாற்றத்தை அவதானிக்கலாம். ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழும் குழந்தையிடம் அன்பு¸ பணிவு¸ விட்டுக்கொடுப்பு¸ மரியாதை¸ உதவி செய்தல்¸ பெரியோரை வணங்குதல்¸ ஒற்றுமை போன்ற பல அம்சங்களை இயல்பாகவே அக்குழந்தை¸ குடும்பத்துடன் இடைத்தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு கற்றுக்கொள்கின்றது. அத்துடன் குறுகிய காலத்தில் தன் வளர்ச்சிக்கு மேலதிகமாக சொற்களை கற்றக்கொள்கிறது. அதாவது குறிப்பிட்ட வயதில் 1000 சொற்கள் தான் பிள்ளை கற்றுக்கொள்ள வேண்டுமெனின் இக்குடும்பத்தில் வாழும் குழந்தை 2000 சொற்களை கற்றுக்கொள்கின்றது. இதனால் இக்குழந்தை சிறந்த விருத்திமிக்க குழந்தையாக வளர்கிறது. ஆனால் இதற்கு எதிர்மாறான ஒரு குடும்பமானது சண்டை சச்சரவுகள் மிக்கதாகவும் தகாத வார்த்தை பிரயோகங்களை மிக்கதாக அமையுமாயின் அச்சூழலில் வளரும் பிள்ளையும் அவர்களை போன்றே வளரக்கூடியதாகவும் சில சமயங்களில் அக்குழந்தையின் நுண்ணறிவு  மற்றும் மனவெழுச்சி¸ சமுதாய விருத்தியிலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படக்கூடியதாக இருப்பதையும் காணலாம். அத்துடன் குடும்பத்தில் குறிப்பிட்ட வயதில் பிள்ளைக்கு கிடைக்கக் கூடிய அன்பு¸ அக்கறை இல்லாமல் போகுமெனில் அக்குழந்தை விருத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படக் கூடியதாகவும் இருக்கும். எனவே தான் சிறந்த குடும்ப அமைப்பு மிக்க பிள்ளைகள் சிறந்த ஆளுமை மிக்கவர்களாக திகழ்வர்

§             பாடசாலை சூழல்

   பிள்ளையின் விருத்தியில் பாடசாலை சூழல் பிரதான வகிபங்கை ஆற்றுகின்றது. குடும்பத்தை விட்டு வெளியில் வரும் பிள்ளை பாடசாலையிலையே அதிக நேரத்தை செலவிடுகிறது. இந்த இடத்தில் ஆசிரியர்களை¸ தங்களது பிரதான கதாபாத்திரங்களாகவும் அவர்கள் கற்றுத்தருவதை வேத வாக்காகவும் கொண்டுதான் பிள்ளைகள் செயற்படுவர். இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள் பிள்ளைகளின் வெவ்வேறுப்பட்ட தன்மைகளை இனங்கண்டு அவர்களுக்கு ஏற்றாட்போல் தங்களது கற்பித்தல் நுட்பங்களை மாற்றியமைத்து பிள்ளைகளின் விருத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துதல் வேண்டும். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள் அதுபோல் ஆரம்ப பிரிவுகளில் அதாவது முதலாம் நிலை¸ இரண்டாம் நிலை¸ மூன்றாம் நிலை ஆகிய தரங்களில் ஆசிரியர்களால் கைவிடப்பட்ட அல்லது இனங்காணப்படாத பிள்ளைகள் எதிர்காலத்தில் திசைமாறி செல்வதை நாம் கண்கூடாக காணலாம். ஆகவேதான் ஒரு பிள்ளையின் விருத்தியில் பாடசாலையின் பங்கு இன்றிமையாததாக இருப்பதுடன் பாடசாலை சூழல் சிறப்பாக அமையுமிடத்து பிள்ளையின் எதிர்கால விருத்தியிலும் பாரியதொரு மாற்றத்தை காணலாம்.

§       சகபாடிகளின் தொடர்பு

  பாலர் பருவத்திலிருந்து பிள்ளை பருவத்திற்கு பிள்ளை வளர்ச்சிக் கண்டதும் பல்வேறு தேடல்களை கண்டறிய பிள்ளை தூண்டப்படுகிறது. இதன்போது ஏனையவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கின்றது. அத்துடன் சகபாடிகளின் தொடர்பு அதிகரிக்கின்றது. அதுமட்டுமன்றி சகபாடிகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் அதிகரிக்கின்றது. இதனால் பல்வகைப்பட்ட தன்மைகளை கொண்ட தரப்பினரின் தொடர்பும் ஏற்படுகிறது. இதன்காரணமாக பல்வகைமைகளை கொண்ட குணப்பண்புகளைக் கற்றுக்கொள்வதுடன் வெற்றித்தோல்வி¸ வெட்கம் அவமானம்¸ சமுதாய ஒற்றுமை¸ ஏற்றத்தாழ்வூ¸ சட்டத்திட்டங்கள்¸ ஒழுக்க விழுமியங்கள் போன்ற பல விடயங்களை அறிந்துக்கொள்கின்றது ஒரு கருங்கல் எவ்வாறு செதுக்கப்பட்ட சிலையாக உருவெடுகின்றதோ அதனைப்போலவே கருங்கல்லாக வெளிவரும் பிள்ளை சிலையாக சகபாடிகளினால் செதுக்கபடுகிறான்.  இவ்வாறாக பிள்ளையின் விருத்தியில் சகபாடிகள் முக்கியம் பெறுகின்றனர்.

ஆக்கம் 
R..திஸ்ணாராஜா 
BA,PGDE, DIP in TAmil,


Post a Comment

0 Comments