வகுப்பறையில் மாணவர்களின் குணவியல்புகள் பல்வேறு தன்மைகளை கொண்டதாக காணப்படுகிறது. அவ்வாறான காரணங்களை உற்று நோக்கும்போது ஏற்கனவே பல்வேறு அறிஞர்களால் ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்பட்ட விடயங்களை நாம் மாணவர்களின் குணவியல்புகளில் காணக்கூடியதாக உள்ளது. மாணவர்கள் எனும் போது 6 வயதிற்கு மேம்பட்ட பாடசாலை செல்பவர்களையே கவனத்தில் கொள்ளலாம். அந்தவகையில் முதலாம் நிலை தரங்களான 1 2 மாணவர்களின் நடவடிக்கைகளும் அதற்கான காரணங்களும் அவதானிக்கப்பட்டதோடு அதற்கு பியாஜே எவ்வாறு தன் கோட்பாட்டில் பதிலளித்துள்ளார் என்பதையும் கீழ்வரும் அடிப்படையில் நாம் நோக்கலாம்
முதலாம் நிலை மாணவர்களின் குணவியல்புகள்
மாணவர்கள் தனக்கு பிடித்த ஒரு விடயத்தை செய்ய முற்படுகின்றனர். உதாரணமாக தொலைக்காட்சியில் ஒரு பாடலை பாரத்தால் அந்த பாடலில் நடனமாடுபவர்களை போலவே இவர்களும் நடனமாட முற்படல். மேலும் ஆசிரியர் போல வீட்டில் செய்து காட்டல் போன்ற விடயங்களை அவதானிக்கலாம். இதற்கு காரணம் குறியீடுகள் மூலம் காட்டுதல் திறன் விருத்தியடைதலே ஆகும். இதனை பியாஜே தூலசிந்தனைக்கு முற்பட்ட பருவத்தில் ஆக்கச்சிந்தனை (4 தொடக்கம் 7 வயது வரை) எனும் பிரிவில் போலச் செய்தல் முறைமை மூலம் விளக்குகிறார். அதாவது பாவை ஒன்றை குழந்தையாகவும் மரக்குற்றி ஒன்றை சவர்க்காரமாகவும் கொண்டு தேய்ப்பர் எனக் கூறுகிறார்.
மேலும் ஒரு விடயத்திற்காக ஆசிரியர் தண்டித்தாலும் அடுத்த கனம்¸ முன் நடந்த விடயத்தை மறந்து அவ்வேளையில் நடக்கும் விடயத்தில் மட்டும் கவனம் செலுத்துவதை வகுப்பறையில் காணலாம். இதற்கு காரணம் பிள்ளைகளின் மத்தியில் எண்ணக்கருக்களை உருவாக்கி கொள்வது கடினமாக இருப்பதே ஆகும் என்கிறார். இதனை பியாஜே ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை மட்டுமே சிந்திப்பர் எனக் கூறுகிறார்.
மற்றும் தன் மனதிற்கு தோன்றிய வார்த்தைகளை சரியானது என நினைத்து பேசுவர். இதனை மழலை மொழி என்போம். மாணவர்களின் பொதுவான குணவியல்புகளில் இதுவும் ஒன்றாகும். இதற்கு காரணமாக இந்த வயதில் மொழி பயன்பாட்டுத் திறன் முறைமையானதாக அமைவதே ஆகும். இதனை பியாஜே தன்கோட்பாட்டில் தன்முனைப்புத் தன்மை என்கிறார்
மேலும் ஒரு பொருளை காண்பித்து உடனடியாக அதனை அவர்களின் கண் முன்னே இருந்து அகற்றினாலும் அவர்களால் அதனை மீள ஞாபகப்படுத்த முடியாது. இதற்கு காரணம் அவர்களின் சிந்தனை மையப்படுத்தப்பட்டு இருப்பதே ஆகும். இதனை பியாஜே தூலசிந்தனைக்கு முற்பட்ட பருவத்தில் தன் சிந்தனை பின் திரும்பும் இயல்பு இன்மை என விளக்குகின்றார்.
மற்றும் விரைவாக சொற்களை கற்றுக்கொள்ளும் தன்மையையும் நாம் வகுப்பறையில் அவதானிக்கலாம் இதனை பியாஜே மொழி விருத்தி அம்சத்தில் ஏறத்தாழ 4 வருடங்களாகும் போது மொழி விருத்தி துரிதமாக நிகழும் என்கிறார் இவ்வாறாக முதலாம் நிலை மாணவர்களின் குணவியல்புகளை கூறலாம்.
அடுத்ததாக இரண்டாம் நிலை (தரம் 3-4) மூன்றாம் நிலை (தரம்-5) மற்றும் தரம் 6 தரம் 7 வரையிலான பிள்ளைகளின் குணவியல்புகளையும் அதற்கான பியாஜேயின் கோட்பாட்டு அம்சங்களையும் ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கலாம்.
பொதுவாக இந்த பருவமிக்க மாணவர்கள் முன்னர் கூறப்பட்ட மாணவர்களின் குணவியல்புகளை விட அனைத்து விடயங்களிலும் சற்று விருத்தி அடைந்தவர்களாக காணப்படுவர். இம்மாணவர்கள் செயற்பாடு ரீதியான விடயங்கள் மீதே அதிகம் கவனம் செலுத்துவர். அத்துடன் அதிகமான விடயங்களை தேடி அறிவதில் ஆர்வத்தை காட்டுவர். மேலும் ஒரு விடயத்தை தொகுத்து கூறக் கூடியதாகவும் பயமின்றி முன்மொழிவுகளை செய்யக் கூடியவர்களாக இருப்பர். அத்துடன் இறந்தகாலம் மற்றும் நடைமுறை விடயங்களை சிந்திக்க கூடியவர்களாகவும் ஒரு விடயத்தை செய்தே பார்க்க வேண்டும் என்ற மனப்பாங்குகளை கொண்டும் காணப்படுவர். இவ்வாறாக இவர்களுடைய குணவியல்புகளை காணலாம். இதனை பியாஜே தன்னுடைய கோட்பாட்டில் தூல சிந்தனைப்பருவம் அல்லது பருப்பொருட் சிந்தனைப் பருவம் ( 7-12 வயது வரை) என்ற பருவங்களினூடாக எடுத்து காட்டியுள்ளார்.
அடுத்ததாக தரம் 8 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்களின் குணவியல்புகளையும் காரணங்களையும் கீழ்வரும் அடிப்படையில் நோக்கலாம்
- எதிர்கால விடயங்களை பற்றி சிந்திக்க கூடியவர்கள்
- பல்வேறுப்பட்ட விடயங்களை சேகரித்து அதனை ஒழுங்குப் படுத்தக் கூடியவர்கள்
- விஞ்ஞான ரீதியாக கருதுகோள்களை அமைக்க கூடியவர்கள்
- தன்னை பற்றியும் தன் வெளித்தோற்றத்தை பற்றியும் அதிக சிந்திக்க கூடியவர்கள்
- எதிர்பால் மீது விருப்பு கொண்டவர்களாக திகழ்வர்
- மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என எண்ணுவார்கள்
- திட்டமிட்டு வேலைகளை செய்யக் கூடியவர்கள்
- சுயமாக முடிவுகளை எடுக்க முற்படுவார்கள்
- சகபாடிகளுடன் அதிக நேரத்தை செலவிடுவர்
- மனதினால் பல விடயங்களை சிந்திப்பர்
- பயமற்றவர்களாக இருப்பர்
இவ்வாறாக வெவ்வேறுப்பட்ட குணவியல்புகளை கொண்டு காணப்படுவர் இதற்கு பிரதான காரணம் அவர்களின் உள்ளுறுப்புக்களின் ஏற்படும் முதிர்ச்சியினால் ஆகும். இவ்வாறான குணப்பண்புகளை பிள்ளை விருத்தி கோட்பாட்டில் பியாஜே¸ நியமசிந்தனை பருவத்தின் (12 வயதிற்கு மேல்) ஊடாக எடுத்துக் காட்டுகிறார்.
இவ்வாறாக அனைத்து விடயங்களையும் ஆராயும் போது¸ பியாஜேயின் கோட்பாடானது¸ பல்வேறுப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் மிக்க சான்றுகளே ஆகும். அத்துடன் ஆசிரியர் என்ற வகையில் வகுப்பறையில் மாணவர்களின் குணவியல்புகளை; அவதானிக்கும் போது ஒவ்வொரு விருத்தி கட்டத்திலும் அவர்களின் பண்புகளானது பியாஜேயின் கோட்பாட்டின் அம்சங்களுடன் ஒத்துப்போவதை கண்கூடாக அவதானிக்கலாம். எனவேதான் பிள்ளை விருத்தி கோட்பாடானது மாணவர்களின் குணவியல்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருக்கிறது என்று கூறலாம்.
ஆக்கம்
R..திஸ்ணாராஜா
BA,PGDE, DIP in TAmil,
1 Comments
பயனுள்ளது அவசியமானதுமான விடயங்கள் நன்றி
ReplyDeleteஉங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்